Wednesday 7 November 2018



                            முத்தாலம்மன் பொங்கல்- 2018

கிராமமும் இல்லாம நகரமும் இல்லாம ரெண்டுங்கெட்டான் நெய்வேலியிலிருந்து இப்படி ஒரு கிராம விழாவுக்கு போவேன், பார்ப்பேன் அதைப்பற்றி வியந்து எழுதுவேன் ன்னு நான் நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. கும்பல்ன்ன்னா அலர்ஜியோ அலர்ஜி எனக்கு. அவ்ளோ பயம்.  துளிக்கூட பயமின்றி கும்பல் ல கலக்க முடிஞ்சுது, ரசிக்க முடிஞ்சுதுன்னா அதுக்கு முழு காரணமும் திரு ப்ரகாஷ் ராஜகோபால் அவர்களின் அபார பாஸிடிவ் எனர்ஜி.  மேலும் கிட்டத்தட்ட அவரின் ஒட்டு மொத்த குடும்பமும் எனக்களித்த உபசரணைகள், பார்த்து பார்த்து கவனித்துக்கொண்ட அக்கறை, இவை யாவும் சொல்லில் அடங்காது. அவருடைய நீண்டகால நண்பரும் (ராம்ஜி) அவரின் மனைவியும் கூட இதில் அடக்கம். திரு ப்ரகாஷ் ராஜகோபால் என்னை கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக பெங்களூரு வரச்சொல்லிப்பார்த்து, நானும் தள்ளித்தள்ளிப்போட்டுக்கொண்டிருந்த இந்த விளையாட்டு ஒரு முடிவுக்கு வந்தது. சரி அவங்களே மதுரைக்கு வராங்க, அவரின் மற்ற உறவுகளையுமே பார்க்கலாம் ன்னு அடியேன் அடிச்ச விசிட்டின் பெருஞ்சுருக்கமே இது.

சாதாரணமா கிராமத்திருவிழான்னாலே, விதவித வாகனங்களில் சாமி ஊர்வலம், 
தேர், தெருவோரக்கடைகள் ன்னு அவ்வளவும் பார்க்கலாம்…இங்கயும் அதே..
இந்தக்கிராம திருவிழாவுக்கும் ஒரு முன்கதை இருக்கு.

ஊர்ப்பெரியவர் ஒரிருவர் சொல்லக்கேட்டதும், கொஞ்சம் படிச்சதும், 
கொஞ்சம் நேரில் கண்டதுமாக விரிகிறது முத்தாலம்மன் பொங்கல் திருவிழா.

கிட்டத்தட்ட அறுநூறு வருஷம் முந்தி  மதுரை மாவட்டத்திலுள்ள  தே. கல்லுப்பட்டிங்கிற ஊர்ல  பஞ்சம் தலைவிரிச்சி ஆடுச்சாம். அதே சமயம்,  ஆந்திராவுல உள்ள நவாப்புக படைஎடுப்புனால அந்த ஊருக்கு ஒரு பாட்டி ஆறு பெண் கொழந்தைகளோட வந்தாங்களாம்.. கிராமத்துல அன்னைக்கு நல்ல வசதியா இருந்த அக்ரகார ராவ் (கிராமத்தலைவர்) வீட்டுலயும் நாயக்கரைய்யா வீட்டுலயும் பாட்டி புள்ளைங்களோட தங்குச்சாம்.. 
கிராமத்துக்கு வந்து அடைக்கலமான அவங்கள தங்களோட புள்ளையாவே நெனச்ச கிராமத்து மக்கள், 
அந்த ஆறு பொண்ணுங்களுக்கும் மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சப்ப அந்த பாட்டி சொல்லுச்சாம். 
நாங்கல்லாம் தெய்வ பிறவிக.. எங்களுக்கு விதிச்ச சாபத்தால மனுசப்பிறவிகளா  நடமாடிக்கிட்டிருக்கோம்.. 
சாபம் முடிஞ்சா பொறப்பட்டுருவோம் அப்படின்னு.

உடனே ஊர் ஜனங்க எல்லாமா சேந்து அம்மா நீங்களும் உங்க புள்ளைங்களும் இங்க வந்த பின்னாடிதான் பஞ்சம் எல்லாம் போயி மழை தண்ணி வந்துச்சு. எங்கள விட்டுட்டு போறேன்னு சொல்றீங்களே அப்படின்னு மொறையிட,  உடனே அந்த பாட்டியும் ஆறு பொண்ணுங்களும்,  நாங்க தீக்குளிச்ச பின்னால எங்க அஸ்திய சுத்துப்பட்டியுலுள்ள நாப்பத்தெட்டு கிராமத்திலயும் தூவுங்க. நாங்க ஆதிபராசக்தியின் வடிவமா ஆயிருவோம்.. ரெண்டு வருஷத்துக்கு ஒரு வாட்டி உங்க மகள்களா இருந்து உங்க கொறை எல்லாம் தீர்த்துவைப்போம் ன்னு சொன்னாங்களாம்.

தமிழ்நாடே தண்ணியில தத்தளிச்சாலும் அந்த ஊருக்கு மட்டும் தூறல் மட்டும்தான் வரும்..
அப்படி ஒரு பூமி யாம் அவங்களோடது.

அந்த பாட்டியும், பொண்ணுங்களும் சொன்ன மாதிரி ரெண்டு வருஷத்துக்கு ஒருவாட்டி திருவிழா எடுக்கும் வழக்கம். இதுல அந்த ஊரைச்சுத்தி இருக்குற ஆறு கிராமத்துலயும் அவங்கவுங்க அம்மனுக்கு பேரு வச்சு வழிபட்டாங்க. அந்த ஊரு முத்தாலம்மனுக்கு.. பக்கத்துல இருக்குற

தேவன்குறிச்சியில ஆதிபராசக்தின்னும்,
கல்லுப்பட்டியில சரஸ்வதி அப்படின்னும்,
வன்னிவேலம்பட்டியில மகாலக்ஷ்மின்னும்,
அம்மாபட்டியில பைரவின்னும்,
காடனேரியில திரிபுரசுந்தரின்னும்,
கிளாங்குளத்துல சபரின்னும்,
சத்திரப்பட்டியில சவுபாக்கியவதின்னும் கும்புடுறாங்க.

எல்லா ஊர்லயும் ஒவ்வொரு பேரு இருந்தாலும் பொதுவா மக்கள் அவளக் கூப்புடுறது 
முத்தாலம்மா ன்னுதான். வழக்கமா தீபாவளி முடிஞ்ச அடுத்த வாரமே வரும்  இந்த திருவிழா. 
இந்த முறை தீபாவளிக்கு முன்பே.



அம்மன் செய்தல்

திருவிழாவுல மொதல்ல அம்மா பட்டியிலதான் எல்லா ஊரு அம்மனும் செய்வாங்களாம்.  செய்வாங்க” ன்னா பச்சை களிமண்ணுல உருவம் செய்து, பெயிண்ட் அடித்து நவராத்திரி பொம்மைபோல கொஞ்சம் பெரிசா! அம்மாபட்டி அம்மன் அங்கேயே  இருக்குறதுனால அதுக்கு சப்பரம் கிடையாது.. மத்த ஊரு அம்மனும் இங்கதான் உருவாகும்கிறதால எல்லா ஊர்ல இருந்தும் சப்பரம் கட்டி எடுத்துக்கிட்டு வந்து, அவங்க ஊரு அம்மன கூட்டிக்கிட்டுப்போக.

ஏழு ஊரு அம்மனும் ஒரே இடத்துல உருவாகி கண்ணு மட்டும் தொறக்காம வச்சிருப்பாங்களாம்.. ராத்திரி எட்டு மணிக்கு மேல கண் தொறப்பாங்களாம்.. அதுக்கு அப்புறம்தான் ஊர்க்காரங்க போய்ப்பாக்கலாம். ராத்திரிஎல்லாம் ஏழு ஊர்க்காரங்களும் அம்மாபட்டிக்கு வந்து கண் தொறந்த அம்மனை ப்பாப்பாங்க
..
இதுக்கு அத்தனை ஊர்மக்களும் க்யூ கட்டி நிற்பதைப்பார்த்தாலே கண்ணைக்கட்டுச்சு……..பல கிலோமீட்டர் தூரத்துக்கு க்யூ. மழைக்காகத்தானே இந்த நன்றி சொல்லும் விழாவே!…..அடிச்சு பெய்ஞ்சது பாருங்க ஒரு மழை….. அப்படியும் க்யூ ஒண்ணும் குறைஞ்ச பாடா இல்ல. அவ்வளவு சேறு சகதியிலும் பொறுமையா க்யூ நகர்ந்து……..ஒரு வழியா ஏழு ஊரு அழகழகான அம்மனைப் பார்த்தோம்…… 

மறுநாள் காலையில அவங்க அவங்க ஊரு சப்பரத்த எடுத்துக்கிட்டு வந்து அவங்க ஊரு அம்மன கூட்டிட்டுப்போவாங்க.. அந்த நேரத்துல மொத்த கிராம மக்களும் என்னமோ சொந்த மகள வெளியூருக்கு அனுப்புறமாதிரி கண்ணு கலங்குவதும் கொலவ போடுவதுமாக (இந்த குலவை ல்லாம் நான் சினிமால தான் பார்த்திருக்கேன்..இப்பதான் நேர் ல பாக்கேன். (பாருங்க அந்த ஊர் சொல்லாடல் இயல்பா அப்டியே வருது..பாக்கேன், நிக்கேன் ன்னுட்டு..! )அப்படியே உணர்ச்சி மயமா இருந்துது…..



எந்த ஊரு அம்மன் அவளோட ஊருக்கு கெளம்பினாலும் அம்மாபட்டி அக்காவ பாத்துகிட்டேதான் இருக்குறமாதிரி தூக்கிட்டுப்போறாங்க ஒவ்வொரு அம்மனும், விடை பெறும் முன் அம்மாப்பட்டி அம்மனை ரெண்டு சுத்து சுத்திட்டு போகும் காட்சி அவ்ளோ அழகு!  சப்பரம் எடுத்து வருவாங்களோ ஒழிய அம்மனை அதில் ஏற்றுவதில்லை…ஒரு மரியாதைக்கு தான் சப்பரம். தனி ஆளாக அம்மனை ஒருவர் (அந்தந்த கோவில் பூசாரி) தலையில் சுமந்து தூக்கி வருவார். வந்து ஊர் எல்லைய தாண்டுனதும் சீக்கிரமா சப்பரத்தோட அவங்க ஊருக்கு போயி அம்மனுக்கு பொங்கல், படையல், நேத்திக்கடன் எல்லாம் சீரும் சிறப்புமா நடக்கும்.. எப்படி இருந்தாலும் ஒரு பாட்டம் மழை கண்டிப்பா உண்டு.

சப்பரம் கட்டுதல்
சப்பரம் என்பது, பார்க்க தேரு போல இருந்தாலும் இதற்கு சக்கரங்கள் கிடையாது சப்பரத்திற்கு முன்னும் பின்னுமாக மும்மூணு நீண்ட பருமனான கழிகள் தான். அதை (கிட்டத்தட்ட ஒரு ஐம்பது பேர் ஒவ்வொரு சப்பரத்திற்கும்) தலைக்கு மேல சுமந்து வருகிறார்கள்.

இந்த சப்பரம் கட்டுவதை அவ்ளோ ஒரு சந்தோஷமா செய்கிறார்கள்.. அம்மாபட்டி தவிர எல்லா ஊர்க்காரங்களும் அவங்க ஊர் அம்மன கூட்டிட்டு போக சப்பரம் கட்டிட்டு வருவாங்க.. அம்மனை கவுரதையா கூட்டிட்டுபோக.. என்ன இருந்தாலும் அவங்க அவுங்க ஊர் தெய்வம் இல்லையா ?? அதனால அந்தந்த  ஊர் சக்திக்கு ஏத்த மாதிரி சப்பரம் கட்டிட்டு வருவாங்களாம்.  இந்த மோட்டார் வச்சி இழுக்குறது.. சக்கரத்துல கட்டி இழுக்குறது அப்படிங்கிற கதையே கிடையாது.. தலைமேலேயே தூக்கிட்டுப்போறதுதான்.







திருவிழா சாட்டுன (ஆரமிச்ச) ஒடனேயே சப்புரம் கட்டுறதுக்கு வேலை ஆரம்பமாயிரும்.. மூங்கில் கம்பையும், தென்னங்கயிறையும் ஊர் தெப்பக்குளத்துல போட்டு ஊற வைக்க ஆரம்பிச்சிருவாங்க.. அப்புறம் ஊர்ல பரம்பரையா சப்புரம் கட்டுற அந்த ஊரு ஆசாரி சப்பரத்த நிறுத்த மும்மூணா ஆறு தாங்கிய கட்டிவச்சிட்டு அதுக்கு மேல இருந்துதான் சப்பரம் ஆரம்பமாகும்.. ஒவ்வொரு அடுக்கா கட்ட ஆரம்பிக்க, சின்னப்பயலுகளுக்கு கலர் பேப்பர் ஓட்டுற வேலையும், ஜிகினா ஓட்டுற வேலையும், சணலு, கயிறு அத இத எடுத்துத்தர்ற வேலையும் குடுப்பாங்க. பாத்துக்கிட்டே இருக்கும்போது சப்பரம் சரசரன்னு ஒசரமாயிரும் (உயரும்).. அப்படியே அப்புறம் அம்மன கூட்டிட்டு வர அன்னிக்கு காலையில வரைக்கும் அலங்காரம் நடக்கும்.  அதுவும் அவ்வளவு கனமான சப்பரத்தை அத்தனை பேருமாய் ஒரு முகமா ஒரு தூக்கு தூக்கி குலுக்குவதைப் பார்க்க பரவசமாய் இருந்தாலும்,,,,,குடை சாய்வதை போல ஒரு தோற்றம் கொடுப்பதால் கொஞ்சம் பக் பக் ன்னும் இருந்ததையும் மறுக்க முடியாது! 


மைக்செட் கட்டி பாட்டு ஓடிக்கிட்டிருக்கும். இந்த படத்த பாத்தீங்கன்னாலே தெரியும் எப்படி தூக்கிட்டுப்போறாங்கன்னு .. ஊர்ல தலைக்கட்டுக்கு இத்தனைன்னு வரி வசூல் பண்ணி மொத்த செலவையும் பகிர்ந்துக்குவாங்களாம்.. ரெண்டு வருஷத்துக்கு ஒருவாட்டி வர திருவிழா ன்னு படு அமர்க்க்களமா நடக்கும்.


ஊரே ஜெகஜோதியா சீரியல் செட்டு என்ன, ஆட்டம் பாட்டம் என்ன, பட்டிமண்டபம் என்ன, இசைக்குழு என்ன, குறவன் குறத்தி ஆட்டம் என்ன, கரகாட்டம் என்ன அப்படின்னு ஊரே மூணு நாளைக்கு அமர்க்களப்படும்.

பறந்து படமெடுக்கும் ட்ரோன் அழகு ...டெக்னாலஜி வளர்ச்சியின் மற்றொரு பரிமாணம் :) 

                               









கரைவேட்டி, வட்டம் சதுரம்னு அரசியல் / ஜாதி மதம் ன்னு எந்த பாகுபாடும். கிடையாது.. நம்மூரு திருவிழா!. நீ கல்லுப்பட்டிக்காரன்! அவ்வளவுதான்.. அதைத்தாண்டி யாரும் யோசிக்க மாட்டாங்க.. சப்பரம் தூக்கும்போது ஒரு லட்சம்பேருஓ” ன்னு சத்தம் போட்டா எப்படி இருக்கும்.. அப்படியே நம்மூரு சப்பரம் மேல வந்துருச்சிரா அப்படின்னு ஒரே சந்தோஷமும் கும்மாளமுமா இருக்கும். தூக்க ஆரம்பிச்ச உடனேயே விறுவிறுன்னு ஓட ஆரம்பிச்சிருவோம்..


                                      



சப்புரம் தூக்க ஒரு செட்டுக்கு அம்பது பேருன்னா கூடவே ஒரு அம்பது ஓடி வருவாங்க.. யாருக்காவது முடியலைன்னா கைமாத்தி விட்டுட்டு அவங்க வெளிய வந்துட்டா, அடுத்த ஆளு தாங்குவாங்க.. இப்படியே அம்மாபட்டி வர்றதுக்குள்ள ஒரு அஞ்சி வாட்டியாச்சும் கீழே வச்சு வச்சு தூக்கிட்டுப்போவாங்க.. அம்புட்டு கனம் இருக்கும்.. அம்மாபட்டி எல்லைக்குள்ள வரும்போது மத்த அஞ்சு ஊர்ல இருந்தும் சப்பரம் வரும் எல்லாம் ஒரே நேரத்துல அம்மாபட்டிக்குள்ள நுழையும்போது திருவிழான்னா எப்படி இருக்கும்னு பாக்கலாம்..  விவரிக்க வார்த்தை இல்லை. அத்தனை தலைங்க.. அத்தனை ஆளுங்க ! ஒரே பக்திமயம்..


இதில் இரண்டு ஊர் சப்பரம் வயல் வெளி வழியாக வரவேண்டி இருக்கும். பெய்ஞ்ச மழையில வயலெல்லாம் சகதி. அதில் சப்பரம் தூக்கி வருவது என்பது கண்டிப்பாக மிகப்பெரிய சவாலான வேலை…..அத்தனை பேரும் ஒரு முகமாய் அந்த சேற்றில் அவ்வளவு கனம் தூக்கி வந்து ரோடு ஏறுவது என்பது நிச்சயமாய் அம்மன் அருள் தான். வயல்வெளிகளின் வழியே தூக்கிக் கொண்டுவரப்படும் இரண்டு ஊர்ச்சப்பரங்கள் (கிளாங்குளம் மற்றும் ,சத்திரப்பட்டி) சப்பரங்கள் மெயின்ரோடில் ஏறும் அழகைப் பார்க்க கண்கள் இரண்டு போதாது.




ஒரு சண்ட.. ஒரு பஞ்சாயத்து.. ஒரு பிக்பாக்கெட் ஒண்ணு கிடையாது!.. எல்லாருக்கும் ஒரே எண்ணம்தான் .. அது முத்தாலம்மன் மட்டும்தான். அப்புறம் எல்லா ஊர் அம்மனுக்கும் தீபாராதனை நடத்தி அந்தந்த ஊர் பூசாரி அம்மன தூக்கிட்டு அவங்க அவங்க ஊருக்குப் போவாங்க

ராத்திரிவரைக்கும் எல்லாரும் பூஜை பண்ணிட்டு, ராத்திரி கிட்டத்தட்ட பனிரெண்டு மணிக்கு அம்மனை கரைக்க போவாங்க.. அதுவரைக்கும் சிரிச்சுக்கிட்டே இருந்த மாதிரி இருந்த ஊரு, அம்மன் பிரிவுசோகத்துல சிரிப்ப விட்டுட்ட மாதிரி இருக்கும்.. கரைக்கிற இடத்துக்கு ஆம்பளைக தவிர யாருக்கும் அனுமதி கிடையாதாம்.. பொம்பளைங்க பாத்தா மனசு தாங்காதுங்கிறதுனால  (இது அப்ப இருந்த வழக்கம். இப்ப பெண்கள் நாங்க திடசித்தம் அல்லவோ?!) அவங்களுக்கு அனுமதி இல்லை.

அம்மனுக்கு கறிசோறு ஊட்டி விட்டு தீபாரதனை எல்லாம் காட்டி கடைசியா தள்ளிவிட்டு உடைச்சிருவங்க.. மறுநாள் தாண்டிருச்சின்னா இதேபோல திருவிழா நடக்கணும்.. அம்மன தினமும் திருவிழா கோலத்துலயே வச்சு இருந்தா ஊரு தாங்குமா.. அதனால பூசைய பண்ணிட்டு நம்ம கொறைகள சொல்லிட்டு அம்மன கரைச்சி விட்டுருவோம்.. அத்தோட திருவிழா முடிஞ்சதா அர்த்தம்.






இதில சிறப்பு என்னன்னா, எந்த மூலையில இருக்குற கல்லுப்பட்டிக்காரானுகளயும் அன்னைக்கு இங்க பாக்கலாம். நீ நாயக்கரு, செட்டியாரு, தேவரு, தலித்து அப்படின்னு எந்த வித்தியாசமும் இல்லாம ஊரே ஒண்ணா சேர்ந்து கொண்டாடுற திருவிழா இது. இன்னைக்கு வரைக்கும் முத்தாலம்மன் அருளால எந்த பிரச்சினையும் இல்லாம போய்க்கிட்டிருக்கிற இந்த முத்தாலம்மன் பொங்கல் …..இதுமாதிரி எப்பவும் நடக்கனும்னு வேண்டிக்கிட்டு, எல்லாருக்கும் எல்லாம் நல்லபடியா நடத்திக்குடு தாயேன்னு வேண்டிக்கிறேன் ன்னு முடிச்சார் அந்த  பெரியவர்.

இப்படி ஒரு விழா எனக்கு மாபெரும் அதிசயம். இன்னும் எவ்வளவோ ஊர்க:ளில் இன்னும் கிராமீயமும், பசுமையும், மனித நேயமும் ஆங்காங்கே வாடாமல் துளிர்த்து நிற்பதற்கு காரணம் இம்மாதிரி திருவிழாக்களே..

அடுத்த முத்தாலம்மன் பொங்கல் 2020 அப்ப இருக்கும். அதுக்கும் போகணும் ன்னு இப்பவே ஆவலாயிருக்கேன். வாங்க நீங்களும்.


நன்றி:

1.        தகவல் மற்றும் சில படங்கள் உதவி திரு. ஜெயக்குமார்
அவர்களின் ஒரு கட்டுரையிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது..
                மற்றும்
2.       திரு. ப்ரகாஷ் ராஜகோபால், அவரின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நட்பு வட்டம்.
இனி எனக்குமே அவர்கள் உறவும், நட்பும் ஆன அருமையான தருணம் இவ்விழா.