Saturday 16 November 2013

கலியன் விட்டதை கலியில் விடாதார்.




தீபாவளி சமயம் பங்குச்சந்தை உச்சத்தில் இருந்ததாம் . சேட்டுகளுக்கு சமமாக ஐயங்கார்களும் அய்யர்களும் இந்த சந்தையில் பணத்தை கொட்டுபவர்களாம்.
உதார குணம் கொண்டவர்களும் இந்த சந்தையை விடுவதில்லை என்று கேள்வி . அத்யயனம் செய்தவர்கள் கூட இதில் சேர்ந்துகொள்கிறார்களாம்.
தொழில் முதலீட்பாக ஆரம்ப பங்குகளில் பங்கேற்பது என்பது வேறு. சூதாட்ட ரீதியில் பங்குகளில் பணம் போடுவது என்பது வேறு.

பங்குச்சந்தை உச்சத்தில் ஏறிவிட்டால் ஏதோ பரமபத வாசல் திறந்தாலும் கிடைக்காத பூரிப்பு சந்தைக்காரர்களுக்கு . வரப்போகிற தேர்தலையொட்டி முன்னாலேயே எல்லாம் விற்று காசாக்கி விட வேண்டும் என்று அரசியல்வாதிகளின் சதியால் பங்குச்சந்தை விலை ஏறிக்கிடக்கிறது என்றே தோன்றுகிறது. . அல்லது, எதுவும் யாருக்கும் திருப்தியாய் இல்லை . பங்குச்சந்தையாவது விலை ஏற்றி வைத்தால் நாடு சுபிக்ஷமாக இருக்கிறது என்று சில சாராராவது மாயத்ருப்தி அடைவார்கள். அது எதற்கும் ஓட்டுக்கும் உதவும் என்ற தந்திர நோக்கத்தில் அரசியல்வாதிகள் விரித்துள்ள மாய வலை இந்த பங்குச்சந்தை விலை ஏற்றம் என்றாவது எடுத்துக்கொள்ளலாம்.
அபரிமிதமான சுபிக்ஷதுக்கு குறி ஏதும் இல்லாமல் பங்குச்சந்தை மட்டும் உச்சத்திற்கு விலை ஏறியிருக்கிறது. கிருஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னால் கஜகர்ணம் போட்டாவது ஏற்றி  விற்றுச் சுருட்டவேண்டும் என்று வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் உத்தியாகவும் இருக்கலாம்.

ஆனால் எதுவும் நன்மைக்கில்லை.

இந்த கார்த்திகை மாதத்தில் நம் கண்ணுக்கு கண்ணான கலியனை நினைக்க வேண்டும். அவர் சூதாட்டம் ஆடுவாராம். ஏன் என்றால் அவருக்கு யம பயம் நெஞ்சில் ஏற்படாததால் செய்தேன் என்கிறாராம்.

சூதினைப் பெருக்கி, களவினைத்துணிந்து சுரிகுழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் நமன்தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன், வேலை வெண்டிரை அலமரக்கடைந்த நாதனே ! வந்து உன் திருவடி அடைந்தேன், நைமிசாரணியத்துள் எந்தாய் !  (நா.தி.பி. 1000)

முன்னர் நான் ஆடிய சூதாட்டத்துக்காக யமன் கறுவிக் கொண்டிருக்கிறான் என்று இப்போது பயம் வந்து விட்டது நைமிசாரண்யத்து நாதனே! உன் திருவடிதான் இனி என்னை காக்கும் என இப்போது வந்துவிட்டேன் என்கிறார்.

ஒரு விதையை போட்டால் பூமாதேவி அதையே நூறு ஆயிரம் தானியம் பூ காய்களாக்கி தருகிறாள். வேதம் ஓதி சடங்குகளும் நடத்தி கொடுத்தால் தெய்வானுக்ரஹம் கிடைக்கிறது. தொழில் செய்தால் அதன் பொருள் அல்லது சேவை பிறரின் தேவைக்கு உதவுகிறது. இவற்ற்டால் கிடைக்கும் பணம் உலகிற்கு நன்மை விளைவித்து பெறுகின்றதாகும்.

பங்குச்சந்தை சூதாட்டத்தில் மேற்கண்ட ரீதிகளில் எந்த நன்மையையும் விளைந்து பணம் வராது. வருகின்ற பணமும்  கலிபுருஷன் அளிக்கும் பிரஸாதமாம். பாபமே பண உருவில் கை மாறுகின்றது .

பரீட்சித்து மகாராஜா தான் இந்த கலியுகத்தின் முதல் சக்ரவர்த்தி.  காலமும் மக்களும் கெட்டு போவதை பரீக்ஷித்தின் நல்ல உள்ளம் வெறுத்தது. கலியை வாழ விட்டால்தானே இந்த யுகம் கெடும் என்று கலிபுருஷனை பிடித்து கொல்லவே போய்விட்டான். கலிபுருஷன் சரணாகதி செய்துவிட்டான். “நான் ஓடி விடுகிறேன்  என்றான். எல்லோருக்கும் வானத்தின் கீழ் ஒரு வாழ்வு உண்டு. எனக்கு எங்காவது ஒரு இடம் கொடு என்று கேட்டான் கலி. பரீக்ஷித்து பத்து இடங்களை கொடுத்தான்.
அதில் முதல் இடம் சூதாட்டம்.
இரண்டாவது குடி.
மூன்றாவது ஒழுங்கீன பெண்டிர்
நான்காவது மாம்ஸ போஜனம்
இன்னும் எதாவது இடம் கிடைக்காதா  என்று கலி வேண்டியதால் அடுத்ததாக தங்கத்தில் இடம் கொடுத்து வசிக்க சொன்னான்.இங்கு தங்க(ம்) என்று இடம் கொடுத்து பணத்தில் இருக்க சொன்னான் என்று பொருள். தங்கம் அக்காலத்து நாணயம். பணத்தில் கலிபுருஷன் இருப்பதால்தான் எத்தனை  அநியாயம் செய்தாவது நாம் அதை சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்ற ஈர்ப்பு ஏற்படுகிறது. பொய், திமிர், காமம், கோபம், பொறாமை ஆகியவையும் கலியின் வாசஸ்தானமாக பரீக்ஷித்து ஒப்புக்கொண்டான். (பணம் மஹாலக்ஷ்மியாச்சே! அதில் கலிபுருஷன் இருப்பானா என்று நினைக்கலாம். மஞ்சள் லக்ஷ்மியின் வாசஸ்தானம் தான். அதில் அதை அரிக்கும் வண்டும் வாழத்தொடங்குகின்றதே . ஸாஸ்த்ரம்  முறையாக வந்த பணம் தான் மஹாலக்ஷ்மி என்று சொல்வதாக அறிய வேண்டும் )

ஒருவர் பங்கு வாங்கினார் என்று வைத்துக்கொள்வோம். நினைத்துக்கூட பார்க்கவில்லை. சடார் என்று நாலு நாட்களில் விலை ஏறிவிட்டது. கொள்ளை லாபம் . விற்று விட்டார். அடுத்த நாள் அவருடைய பெண் சொல்கிறாள். நான் நாலு நாள் முன்னாடி பங்கை விற்றேன் . என் துரதிர்ஷ்டம், அது சடார் என்று விலை ஏறிப்போச்சு. நான் வாங்கின விலைக்கும் விற்ற விலைக்கும் ஏக நஷ்டம். இப்போது நஷ்டத்துக்கு மேல் நஷ்டம். என் பங்கு நான் விற்றவுடன் சடார் என்று விலை ஏறிவிட்டது என்று சொல்லி கண்ணீரே வந்து விட்டது. அப்பா வாங்கியதும் அதே பங்குதான், பெண் விற்றதும் அதே பங்குதான். இப்போது அப்பாவுக்கு வந்த லாபம் அவர் பெற்ற பெண்ணின் கண்ணீரோட வந்துள்ளது. பெண்ணின் கண்ணீர் அல்லது இதே போல் யாருடைய கண்ணீரோ ? பெண்ணின் கண்ணீரை கண்ட பின்பும் அந்த் லாபத்தை ஏற்றுக்கொள்ளுமா மனது ?  Exchange ல் அப்பாவும் மகளும் லாப நஷ்டங்களை நேரடியாகவே settlement பண்ணிக்கொள்ளலாம் “ என்று சொல்லிவிட்டால் அப்பாவின் மனது என்ன சொல்லும்? பெண்ணிடமிருந்து பணம் வாங்கிக்கொள்வாரா? கண்ணுக்கு தெரியாத கண்ணீர் மூலம் Exchange வழியாக லாபம் வருவதால் இசைந்துவிடலாமா?

லாபம் வருகிறது என்று யார் சொன்னார்கள்? போட்டதெல்லாம் போச்சு ஸார் என்று குமுறுபவர்களே அதிகம். சூதாட்ட காயை நகர்த்தும் பணமலைகளான Mutual Fund களே மண்ணை கவ்வும் போது செய்தித்தாள்களில் பரப்பப்படும் நூற்றுக்குத்தொண்னூறு பொய்த்தகவல்களால் நம்பிப்போட்ட பணம் மண்ணை கவ்வாமல் என்ன செய்யும்.
Tips எல்லாம் pits.!

*இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட நேரத்திற்கு விலை போட வேண்டும்.

*சூதாட்டத்தி நினைத்தும் பேசியும் படித்தும் ஆராய்ந்தும் செலவழித்த நேரத்திற்கு விலை போட வேண்டும்

*சூதாட்டத்தில் மனம் பதைத்ததிற்கும் வருத்தத்திற்கும் விலை போடவேண்டும்

*இதனால் இரத்தம் கெட்டதற்கு விலை போடவேண்டும்

*பங்கு விலை சரிந்து ஏற்பட்ட நஷ்டத்தை கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும்

*இழந்த தன் சௌக்கியத்திற்கும், குடும்ப சௌக்கியத்திற்கும் விலை போடவேண்டும்

*வங்கிகளில் முதல் போட்டிருந்தால் வந்திருக்க கூடிய வட்டியை இழந்ததிற்கும் நஷ்டக்கணக்கில் கூட்டிக்கொள்ளவேண்டும்

*ஏதாவது லாபம் என்று வந்திருந்தாலும் அது கலிபுருஷன் கொடுத்த பணம். ஆதலால் யமன் கறுவிக்கொண்டிருப்பானே அதற்கும் சேர்த்து விலை போட்டு பார்க்க வேண்டும்

*இழந்த ஸ்வதர்மத்துக்கும் நஷ்டக்கணக்கை பார்க்க வேண்டும்

*தன் குடும்பத்திற்கும் தானே இந்த சூதாட்டத்தின் முன்னோடியாகி வம்சத்தையே கெடுத்த பாபத்திற்கும் விலை கணக்கிட வேண்டும்

*அப்புறம் லாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை சொற்ப லாபமும் இத்தனை விலை கொடுத்து வந்தது என்று நன்றாக புரியும்
ஏதோ எல்லோரையும் நன்றாக வாழவைக்க ஆசைப்படும் கலியனின் திருவுள்ளத்திற்காவது இந்த கட்டுரை உகக்கும் என்று எழுதி வைத்திருக்கிறேன் !

“ஸ்ரீ ரங்கநாத பாதுகா என்ற புத்தகத்திலிருந்து

ஸ்ரீ.உ.வே.நாட்டேரி  கிடாம்பி ராஜகோபாலாச்சார்யர், ஆசிரியர். 

Monday 11 November 2013

கா'ரண'(காரிய)ம்





காரணமில்லாமல் காரியமில்லை என்பது
நம(என)க்கு லேட்டாத்தான் புரிய வருகிறது. 

நாங்கள் டீ சாப்பிடும்போது அதற்கும் பால் ஊற்றியாக வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து ஊற்றினால்..அவ்ளோதான். அது அப்படியேதான் இருக்கும். திரும்பிக்கூட பார்க்காது.
தெருமுனையில் வரும் போதே என் வண்டியின் சத்தம் அதற்கு மிகப்பரிச்சயம்! வாலாட்டிக்கொண்டு வந்துவிடும் வாசலுக்கு வரவேற்க.
சிலசமயம் நான் வரும் நேரம் அது இல்லாமலிருந்து அப்புறம் ஓடிவந்து என்னை தேடி பாத்ரூம் வாசலில் காத்திருக்கும் !
நாங்கள் யாரேனும் ஒருவர் ஊரில் இல்லாத நாட்களில் சாப்பிடாமல் இருக்கும்.
சுத்தம் முக்கியம். அழுக்கு நீர் குடிக்காது. பழைய சாதம் பிடிக்காது. துளி தூசு இருக்கிற இடத்தில் கூட படுக்காது. பேரீச்சம்பழம் விரும்பிச்சாப்பிடும். அணில் ஆகாது. குருவிகளுடன் அதற்கு இருந்த நட்பு மிகவும் ஆச்சரியம். தனது தட்டிலிருந்து குருவிகள் கொத்தி தின்றால் மௌனமாக புன்சிரிப்புடன் பார்த்து கொண்டிருக்கும்.. ஆனால்  அணில் வந்தாலோ காக்கை வந்தாலோ ஆக்ரோஷமாய் துரத்தும்.
அது நமது தொடுகையை விட குரலைத்தான் ரொம்ப கவனிக்கும். குச்சியை வைத்து ஆக்ரோஷமாக முகத்தை  வைத்துகொண்டு அடித்தால் கூட அது கோபப்படாது. ஆனால் அதே சமயம் அடிக்காமலே குரலை மட்டும் உயர்த்தி அடிப்பது போல கையை ஓங்கி பாருங்க..பாய்ந்து குதறிவிடும் குதறி.
Dogs Psychology !
நாம் கோபமாக இருக்கிறோமா வருத்தமாக இருக்கிறோமா சந்தோஷமாக இருக்கிறோமா என்பதை நம்மிடம் இருந்து பரவும் அலைகளில் இருந்தே அது உணருமாம்!
நாம் யாரிடம் என்ன மாதிரி நடந்துக்கிறோம்ன்னு கூர்ந்து கவனிக்கும்.
அடுத்த முறை அதுவே ஆட்டோமாடிக்காக குலைப்பதோ வாலாட்டுவதோ ட்யூன் பண்ணிக்கும்!
நான் தியானத்திற்கு உட்காரும் நேரம் அதுவும் சத்தம் போடாமல் தூரத்தில் என்னை பார்த்தவாறே படுத்திருக்கும் . அந்த நேரத்தில் யாரேனும் வந்தால் கூட குலைக்காது.
ஆட்கள் வந்தால் ஒருமாதிரி; நாயோ மாடோ வந்தால் ஒருமாதிரி ன்னு விதவிதமாய் வாய்ஸ் மாடுலேஷன் வச்சிருக்கும்.
என்ன ரோஷம் ? என்ன அமெரிக்கை ! என்ன வாத்சல்யம்! அப்படி பழகும் விதவிதமாய். சந்தோஷசமயங்களில் தலைதெறிக்க மூணு நாலு முறை கிரௌண்டை சுத்தி சுத்தி ஓடி என்னை பிடி என்னை பிடி ன்னு கிட்ட வந்து சவால் விடும்..
பிடிக்க குனிவதற்குள் பளிச்னு வளைஞ்சு ஓடிடும் ... !

பதினொரு வருஷ சகவாசம் !

இப்போ இல்லை இதெல்லாம்...ஒரு ரெண்டு வாரம் ரொம்ப கஷ்டப்பட்டது . மருந்து மாத்திரை, ஊசி, ஹூஹூம்..எதுக்கும் சரியாகலை. வயதும் ஒரு காரணமாய்  இருக்கலாம் நோய் தாக்கு பிடிக்க முடியாமல் போனதற்கு.
எந்த வேலை செய்தாலும் அதன் நினைவு ஊடே மின்னுகிறது .........

போகட்டும்..ரொம்ப கஷ்டப்படாமல் போனதும் ஒரு விதத்தில் பரவாயில்லைன்னு தான் இருக்கு. இருந்தாலும்..... ஹ்ம்ம்....

மீண்டும் முதல் வரி !

Saturday 26 October 2013

அன்பெனப்படுவது யாதெனில் !

                                அன்பெனப்படுவது யாதெனில் !

அந்த ஏழு வயது சிறுமி துள்ளி ஓடி வந்த வேகத்தில் தன் பட்டுப்பாவாடை தடுக்கி விழுந்தாள். கூட இருந்த சிறுவர்கள் கூட்டம் கொல்லென்று சிரிக்க அந்த சிறுமிக்கு துக்கமும் அவமானமுமாக உதடு அழுகையில் பிதுங்கியது. கூட்டத்தில் அவள் வயதொத்த ஒரு சிறுவன் மட்டும் உடனே கூட்டத்தை விலக்கி ஓடிவந்து தன் இரு கை நீட்டி அவள் பற்றிக்கொள்ள  உதவி அந்த குழந்தையை எழுப்பி விட்டான். சிறுவர்கள் கூட்டம் சட்டென்று அமைதியில் கலைந்தது.

அந்த குழந்தையின் குளுமையான அழகு விழிகள் அவன் மனதில் சித்திரமாய் பதிந்தது. அந்த குழந்தைக்கும் அவனின் கருணையும் பெரிய மனுஷ தோரணையுடன் வந்து தன்னை தூக்கி விட்டு அழைத்து சென்ற லாவகமும் மனதில் தங்கியது.

வாழைத்தோரணம், நாதஸ்வரம் மேளம்,.பளபளவென்று பட்டும் நகையுமாய் பெண்கள் கூட்டம். கல்யாண வீடுகளுக்கே உரித்தான கலகலப்பு அங்கே கோலோச்சியது.

விழுந்த குழந்தை தன் அம்மாவை தேடி அவனுடன் நடக்க, எதிரே வந்த அவன் அம்மா யாருடா இந்த செல்லகுட்டி என்றாள்? அம்மா...இவ அங்கே வாசல்ல விழுந்துட்டா ம்மா. எல்லாரும் சிரிச்சாங்க..என்று சொல்லி முடிப்பதற்குள்  இவன்தான் என்னை தூக்கி விட்டான்ம்மா என்றது அந்த அழகு பெண் குழந்தை. சிறுவனுக்கு முகமெங்கும் மத்தாப்பு..ஹீரோ தோரணை! அப்படியா செல்லம்? எங்க உன் அம்மா? யாரு சொல்லு ? என்று அந்த பெண்மணியும் அந்த குழந்தைகளுடன் நடக்க அந்த சமயத்தில் எதிரே வந்த அந்த பெண் குழந்தையின் பெற்றோர்கள் தன் மகளுடன் கூட வருபவர்களை ஒரு குழப்பத்துடன் எதிர்  நோக்க ..அம்மாஎன்று அவளிடம்  ஓடி அப்பாவின் தோள்களில் ஏறி ஊஞ்சலாடியது அந்த குழந்தை. என்னாச்சு தீபா செல்லம் ?
குழந்தை மறுபடியும் ஆக்ஷன் ரீப்ளே ! சிறுவனுக்கு மறுபடி பரவசம். சரி வா..என்று தீபாவுடன் அவர்கள் திரும்பி நடக்க சிறுவனுக்கு தனது உயிரே போவது போல துடித்து போய்விட்டான்.   அம்மா...என்னம்மா இது என்று தன அம்மாவை  பார்க்க அம்மா ஒன்றும் சொல்லாமல் அவன் கையை பிடித்துக் கொண்டு எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தாள். அவனோ கூட வர முரண்டு பிடித்தான்.

இன்னும் பத்து வருடங்களில் இந்த உறவினர்கள் பல முறை பல கல்யாண விசேஷங்களில் சந்தித்து கொண்டாலும் பேசவே இல்லை. ஆனால் தீபாவும் சுந்தரும் மாறவேயில்லை.

தடுத்து பார்த்தார்கள். அவர்களுக்குள் இன்னும் ஆழமாக வேர் பரப்பியது நேசம். இது நேசம் என்பதை இருவரும் உணர்ந்திருந்தாலும் வெளிப்படுத்திக்கொண்டதில்லை.

இருவரும் காலேஜ் பருவத்தில் இருக்கும் போது சுந்தர் தைரியமாக நலம் விசாரித்து ஒரு கடிதம் எழுதினான். பதிலுக்கு தீபா சுந்தருக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்பினாள்.

குடும்ப நிகழ்ச்சிகளுக்கு இருவரும் சேர்ந்து போகாதபடி இரு தரப்பு பெற்றோர்களும் பார்த்துகொண்டார்கள். ஆனாலும் அவர்கள் ஏதோ ஒரு சமயங்களில் சந்தித்து கொண்டு தான் இருந்தார்கள்.

இந்த சமயத்தில் விதி வேறுவிதமாக அவதாரம் எடுத்தது.தீபாவால்  நிற்க முடியவில்லை..அவ்வப்போது நடக்கும்போதே விழுந்து விடுவாள். நான் ஏன் விழுகிறேன் என்பதே எனக்கு புரியவில்லை ..அம்மா அப்பாவோ நீ கவனமின்றி நடக்கிறாய் அதான்..என்றார்கள்..இதுபோல தீபா அடிக்கடி கீழே விழ பிரச்னையின் தீவிரம் செவிட்டில் அறைந்தது. டாக்டரிடம் கூட்டிப்போனார்கள். தசையை பலவீனமாக்கும் Progressive Muscular Distrobi (ப்ரோக்ராசிவ் மஸ்குலர் டிஸ்ரோபி ) என்றார்கள். அதற்கு தனிப்பட்டு ஏதும் சிகிச்சை இல்லை என்றும் பயிற்சி மூலம் தசைகளை இயக்கி பலப்படுத்த வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்கள்.

தீபாவின் பெற்றோர்கள் கலங்கி போன அளவுக்கு தீபா  கலங்கவில்லை. படித்தாள். பயிற்சியில் தீவிரம் காட்டினாள். Staff Selection பரிட்சையில் தேர்வாகி மத்திய அரசு பணிக்கு  டெல்லியில் வேலைக்கு ஆர்டர் வந்தது. அவ்வளவு தூரம் வேலைக்கு போகவேண்டாம் என்றதை பிடிவாதமாக வென்று டெல்லி வந்து வேலைக்கு சேர்ந்தாலும் அந்த சீதோஷ்ண்நிலை ஒத்துகொள்ளாமல் பணி மாற்றம் வாங்கி மறுபடி புறப்பட்ட இடத்துக்கே.

இந்த காலகட்டத்தில் சுந்தர் இன்ஜினீயரின் முடித்து வெளி நாட்டில் வேலைக்கு சென்று,  விடுமுறையில் வீடு திரும்பியபோது தீபாவுக்கு திருமணமாகியிருக்கும், குழந்தைகள் கூட இருக்கலாம் என்ற எண்ணத்தில் விசாரிக்க தீபாவின் உண்மை நிலையறிந்து திகைத்து போய் தீபாவை சந்திக்க போன போது ......

பட்டுப்பாவாடையில் துள்ளித்திரிந்த தீபா மனக்கண் முன்பு வலம் வர, எதிரே சுந்தரை பார்க்க சிரமப்பட்டு எழுந்த தீபா சுவரை பிடித்து கொண்டு வந்த காட்சி சற்றும் நம்பமுடியாததாக இருந்தது.

காதல் உணர்வுகள் மனம் முழுக்க இருந்தாலும் அதை வெளிபடுத்திக்கொள்ளாமல் மவுனமானாள் தீபா.திருமணம் பற்றி எல்லாம் சிந்திக்கவே இல்லை என்றாள் சுந்தரிடம்.

சுந்தர் ஒன்றும் பேசத் தோன்றாமல் திரும்பி மீண்டும் வெளி நாட்டுக்கு போய் அங்கிருந்து “உன்னை எனக்கு தருவாயா தீபா ? என்று ஒரு கடிதம் போட்டார். அப்படி எல்லாம் ஒரு வாழ்க்கைக்கு நான் ஆசைப்படவில்லை என்று கூறிவிட்டாள் தீபா. ஆனால் மனம் முழுக்க கொழுந்து விட்டெறிந்த காதல் ஜோதியை இருவரும் உணர்ந்தாலும்   தீபா வாயே திறக்கவில்லை. சுந்தர் பிடிவாதமாக உன்னைத்தவிர வேறு யாரையும் நான் மணக்க போவதில்லை. உன் மனம் மாறினால் சொல்லி அனுப்பு என்று கூறிவிட்டார். கடைசியில் தீபா சம்மதிக்க இரு வீட்டாரும் எதிர்க்க ..சுந்தர் உறுதியாய் தீபாவின் கரம் பிடித்தார்.
இதுவரை ஒரு சாதாரண காதல் கதை. இனிமேல்தான் இருக்கு கதையின் அச்சு.

மணமான மறுநாளே தனது அன்பை அதிரடியாய் காட்ட துவங்கினார் சுந்தர்.
ஆம். எங்கு சென்றாலும்  தனது மனைவியை அலாக்காக தூக்கி கொண்டே சென்றார். முதலில் விளையாட்டு என்று நினைத்தார் தீபா. ஆனால்..குடும்பவிழா, கோவில், பார்க், பீச் எங்கு சென்றாலும் தன மனைவியை தூக்கி கொண்டே சென்றார் சுந்தர்.
தீபாவிற்கு கண்கள் பனிக்கின்றன...இவ்வளவு அன்பான மனிதர் இங்கே இருக்கிறார் என்பதை நான் எல்லோருக்கும் சொல்ல விரும்புகிறேன். உலகத்திலே மிகுந்த அதிர்ஷ்ட சாலி நான் என்பதையும் இந்த உலகிற்கு எடுத்து சொல்ல விரும்புகிறேன். அது மட்டுமல்ல..பார்த்து கொண்டிருந்த வெளி நாட்டு வேலையையும் விட்டு விட்டு எனக்காக இங்கே இருக்கிறார். என்னையும் வேலை பார்க்க அனுமதித்திருக்கிறார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிரண்டு வருடத்திலேயே   சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கை என்று முடங்கி விடுகிறார்கள். தீபாவின் பிடிவாதமும் தன்னம்பிக்கையும்  தான் இந்த அளவுக்கு அவரை பலத்தோடு வைத்திருக்கிறது ..அதனால் தான் நன் அவளை வேலைக்கு போக வேண்டாம் என்று கூறவில்லை  என்றார். காலேஜ் போகும் வயதில் ஒரு அழகு மகள் இருக்கிறாள் இந்த தம்பதிகளுக்கு . இந்த அன்பை என்னென்பது !  
19,10.2013 தினகரனிலிருந்து.        


Sunday 13 October 2013

கொலு மஹாத்மியம்

இது ஆரம்பமுமல்ல. முடிவுமல்ல.
ஆரம்பம் என்பதையே  நாம் இடையில் தான் அறிகிறோம்.
முடிவையோ அறிந்து கொள்வதே இல்லை.

நானும் இதை எதற்கு ஆரம்பிச்சேன்னு நடுவில் சொல்லிவிடுகிறேன்!
இல்லாட்டா முடிக்கறதுக்கு முன்னாடியாவது சொல்லிடறேன் !!

ஒரு வழியா தசரா  கொண்டாட்டம் லாம் முடிஞ்சுது.
நிறைய பேர் கொலுவை ஃ போட்டோவாகவும் ஸ்டேட்டஸாகவும் போட்டு
ஃ பேஸ் புக் மொத்தமும் ஜோரா  கலகலன்னு இருந்துது...

சின்ன வயசு கொலு கொண்டாட்டங்களையும்
ஃ பேஸ் புக்குக்கு முந்தின கொலு கொண்டாட்டங்களையும் நினைத்து பார்க்கிறேன்! (வேற வழி!) கொலு இல்லைதான் . அதுக்கு நான் ஒண்ணும் ஸ்டேட்டஸ் ஸும் போடலைதான். அதுக்காக உங்களை அப்படியே நிம்மதியா வுட்டுட்ட முடியுமாங்கிறேன். நான் கன்னா பின்னா ன்னு யோசிச்சதை ல்லாம்
இங்க கொட்டி களேபரம் பண்ணாம!?

ஸ்கூல் படிக்கிற வயசில வேஷங்கட்டிண்டு கொலுவுக்கு அழைக்க போவோம். ராதா கிருஷ்ணன், பாரதியார், கிராமத்து பெண், சேட்டு மார்வாடி அலங்காரம் , வில்லும் அம்புமா இராமன் , மடிசார் மாமி இன்ன பிற எல்லாம். நாங்க அக்கா தங்கைங்க மூணு பேரு, அக்கம்பக்கத்து செட்டு ஒரு அஞ்சு பேரு. ஆக எட்டு பேரும் அதகளம் பண்ணிருக்கோம்.  

நாங்க இப்படி கும்பலா வரதை பார்த்து சந்தோஷப்பட்டவர்களும் உண்டு. கதி  கலங்கி போனவர்களும் உண்டு. பின்ன..? எங்க செட்டுல யாராச்சும் எங்கயாவது ஒரு பொம்மைய யாச்சும் உடைக்காம வந்ததில்ல...!

பாடச்சொல்ல வேண்டியதுதான்.. பாடச்சொன்னதும்....நாங்கல்லாம் கொஞ்சங்கூட பிகு பண்ணிக்கவே மாட்டோம்...கோரஸா..
“உண்மை பேசும் காந்தியாம்
உலகம் புகழும் காந்தியாம் ன்னு எடுத்து விடுவோம்!
ஸ்கூல் பாட புக் ல இருக்கிற பாட்டை.!
போரும் போரும் ன்னு சுண்டல் குடுத்தா கூட நிறுத்தாம
மூச்சு விடாம பாடி முடிச்சிட்டு தான் நிறுத்துவோம்.
ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் அஞ்சு  வீடு கணக்கு.
அஞ்சு வீட்லேயும் இதே பாட்டுதான் !!

வரப்போ...இது என் சுண்டல்,,
இல்லே இதுதான் என்னோடதுன்னு அதுக்கு ஒரு ரகளை...
வேஷம் லாம் அங்கே இங்கே அவுந்து தொங்கும்..
ஒரு கையால அதையும் பிடிச்சுண்டு மல்லு கட்டுவோம்..

அடுத்தநாள்....வேற வேஷம்.. வேற தெரு.. வேற வீடு..வேற பாட்டு.

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தில் கண் இரண்டு
மூன்று முக்காலிக்கு கால் மூன்று
நான்கு நாற்காலியின் கால் நான்கு ‘
ஐந்து ஒரு கை விரல் ஐந்து
ஆறு ஈக்கு கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்திக்கு கால் எட்டு
ஒன்பது தானிய வகை ஒன்பது
பத்து இரு கை விரல் பத்து ன்னு ராகமா இழுத்து பாடுவோம்..!!

அதோட வீட்டுலேயும் அப்பாவோட வெள்ளை வேஷ்டி எடுத்து திரை கட்டி வேஷ்டிக்கு பின்னாடி விளக்கு வைச்சு,  விரலை மடக்கி நிழலில் மான், நாய் குரைக்கிறது, தாத்தா & பாட்டி ன்னு பயாஸ்கோப்பு வேற காட்டுவோம்!

எதுக்கு ஆரம்பிச்சேன்னா அம்மா இருக்கிறப்போ..அத்தனை பண்டிகைகளிலும் கொலுவுக்கு தனி முக்கியத்துவம் இருக்கும். சீமந்த புத்ரி நான் பிறந்த பண்டிகை காலம் என்பதால் கூட இருக்கலாம் :p

அவ்ளோ கொள்ளை கொள்ளையா பொம்மை...! பெரிசு பெரிசா அகல அகலமா ஒன்பது படி வைத்து மேல்படி ரெண்டு ஓரத்திலும் ரெண்டு பெரிய தார் ட்ரம் வச்சு பெரிய ஊஞ்சல் பலகை, அடுத்த படி, ஹாலோ ப்ளாக் கல் அடுக்கி  வச்சு அதில் ஒரு பெரிய நாலடிக்கு ரெண்டடி பலகை, அதுக்கு அடுத்த ரெண்டு படியும்  இன்னும் அகலமான ரெண்டு பென்ச். நாலாச்சா?  அப்புறம் சின்ன பலகை வரிசையா மூணு, ஏழாச்சா? கடைசி ரெண்டு படி, ஒரு படிக்கு பெரிய டிரங்க் பொட்டி ரெண்டு, கடைசி படிக்கு என்னோட அலுமினிய ஸ்கூல் பெட்டி! செட்டியார் கடை சாமான்லாம் சொப்பு ல  வைக்க!  அதிலும் பொம்மையை நெருக்கமா வைக்கணும் ..அதுவும் போதாமல் அலமாரி ஃ புல்லா அஞ்சு அலமாரியிலும் பொம்மைகள். இது போக பார்க், ஸ்கூல்,  கடைத்தெருன்னு சீரியல் லைட் லாம் போட்டு ஜகஜ்ஜோதியா இருக்கும். பார்க் ரெடி பண்ண ஒரு வாரம் முன்னாடியே கடுகு / கேழ்வரகு விதைத்து காம்பவுண்ட் ரெடி பண்ணுவோம்.

பெரிய பொம்மைகள்...பரம்பரை பொம்மைகள், அப்பப்போ பார்த்து பார்த்து வாங்கின பொம்மைகள்ன்னு அவ்ளோ இருக்கும்.  அம்மாவோட அம்மா குடுத்த பாஸ்போர்ட் சைஸ் ஸ்ரீ நிவாசனே ஒரு ரெண்டடி இருப்பார். தவிர பள்ளி கொண்ட ரெங்கநாதன், ரெண்டு பக்கமும் வாழை தோரணத்துடன் அபயஹஸ்த சத்யநாராயணா, ஆர்ச் கட்டி ஊஞ்சலாடும் ராதா கிருஷ்ணன், சுற்றிலும் ஆறு கோபிகைகளுடன் கிருஷ்ணன், ராம, லக்ஷ்மண, சீதா ஹனுமனுடன் மஞ்ச மஞ்சேல் ன்னு ஒரு செட், முக்குருணி விநாயகர். நடுவாந்திரமான பொம்மைகள் ஸ்ரீ சாரதாம்பாள்,  முத்தேவியர், ஸ்ரீ ஆண்டாள், வள்ளி தெய்வானையுடன் முருகன், தேவி கருமாரி அம்மன், லக்ஷ்மி சரஸ்வதின்னு. அப்புறம் செட் பொம்மைகள் ன்னு பார்த்தா  தசாவதார செட், கல்யாண செட் (ஃபோட்டோ கிரா ஃபருடன்!) , கிரிக்கெட் செட், நாத்து நடுவதிலிருந்து மூட்டையை  லாரியில் ஏத்தி சந்தைக்கு அனுப்புவது வரை இருக்கிற விவசாய செட், ஐஸ் வண்டிக்காரனுடன் நான்கு ஸ்கூல் பசங்க செட், ன்னு செட் பொம்மைகள். விவேகானந்தர், அவ்வை, வள்ளலார், காந்தி, புத்தர், கன்னத்தில் கை வச்சுக்கிட்டு தொப்பி போட்ட பொம்மை ..தவிர வித வித பறவைகள்...னு குட்டி குட்டி பொம்மைகள் கணக்கிலடங்கா.  



அத்தனையையும் பொறுமையா பிரிச்சு எடுத்து வைப்பதிலாகட்டும், எந்த பொம்மையை  எங்கே வைப்பது என்ற நிர்வாக ஆளுமையிலாகட்டும் அம்மாக்கு நிகர் அம்மாதான்.

கொலு முடிஞ்சதும் பொம்மைகளை எல்லாம்  ஒருநாள் படுக்க வைக்கணுமாம்.. ஒன்பது நாள் நின்ற களைப்பும் அலுப்பும் போக.! அதுக்கப்புறம் தான் எடுத்து வைக்கணுமாம்.

அதை எல்லாம் எடுத்து வைப்பதுதான் மகா மகா பெரிய நொச்சு வேலை.
அளவான துணி கிழித்து பொம்மைகளை அதில் சுற்றி கட்டி மெருகு குலையாமல் எடுத்து வைப்பதில் அம்மாவை அடிச்சுக்க ஆளே கிடையாது. அத்தனை  பொம்மைகளும் அந்த பெரிய தார் ட்ரம் க்குள் அடைக்கலமாகும். தார் ட்ரம் ன்னா தார் பூசியிருக்கிற ட்ரம் இல்லை .அதுக்கு red oxide ப்ரைமரி கோட் அடிச்சு பெயின்ட் பூசி ஐந்தடி உயரமும் ரெண்டடி குறுக்களவுமா இருக்கும். மிச்ச சின்ன பொம்மைகள் எல்லாம் ட்ரங்கு பெட்டி மற்றும் பெரிய தவலை க்கு போகும். பரணில் தூங்கும் அடுத்த கொலு வரை.

ஈவிரக்கமில்லாத கொலை ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனால் அதை பார்த்து இருக்கீங்களா? அனுபவிச்சு இருக்கீங்களா நீங்க ?

அம்மா இறந்த வருஷம் நான் கோவை ஈஷா மையம் சென்றிருந்த போது
அப்பா அத்தனை பொம்மைகளையும் ......  அ  த்   த்  த  னை  ....... பொம்மைகளையும் ஒழிச்சு கட்டி விட்டார். ஒரு துண்டு துணுக்கு கூட இல்லை. 
என்ன பண்ணினார்?.. எப்படி அவ்வளவையும்? என்ன தான் செய்தார்?
எதுக்கும் பதிலில்லை. இதை என்னால் கொஞ்சங்கூட தாங்கிக்கவே முடியவில்லை. ஒருமாதம் பித்து பிடிச்சது போல இருந்தேன்.

இப்படி ஒரு மனுஷனா? ஆனாலும் எனக்கு இன்னமும் அப்பா தான் சகலமும்.
இன்னமும் பயப்படுவேன் அவர் வேண்டாம்ன்னு சொன்னதை செய்ய.


ஆனாலும் நான் முதலிலிருந்து தொடங்குவேன்.  என்றேனும் !


Monday 7 October 2013

பழமொழியும் பார்க்கர் பேனாவும் !

வந்தனம்.
இந்த எண்ணம் சிவ நாராயணன் என்பவரின் ஒரு பதிவில் தோன்றியது
பாட்டி காலத்து பழமொழிகள் எல்லாம் இன்னும் உயிரோட்டமாய் அர்த்தம் நிரம்பியதாகத்தான் இருக்கு .

பழமொழிக்கு முன்னாலே ஒரு சம்பவம் சொல்லிடறேன்..
அப்புறம் இந்த பழமொழி அதோட மேட்ச் ஆகுதான்னு பாக்கலாம்.

ஒரு விழாக்கால மதியம். எல்லாரும் சாப்டுட்டு உண்ட மயக்கத்துல ஆளுக்கு ஒரு வசதியான ஓரம் பாத்து படுத்தாச்சு. பக்கத்து வீட்டு வாண்டு ஒண்ணு மட்டும் துருதுருன்னு அங்கியும் இங்கியும் எல்லோரையும் தன்னோட பிஞ்சு காலால மிதிச்சு ஓடிண்டு இருக்கு.
அப்பா – ஏம்மா இங்க வச்சிருந்த என்னோட பார்க்கர் பேனா எங்கே?
நான் – தெரிலியேப்பா. அங்க உன் டேபிள் மேலதான் இருந்துதே..?

நடுவில் அந்த வாண்டு குடுகுடுன்னு ஓடிவந்து "யே...தாத்தாவோட பேனாவ ராமு மாமா எதுத்திந்து போயித்தார்" ன்னு மிழற்றியது .



அப்பா – என்னம்மா இது? எந்த ராமு?
நான் - ஹ்ம்ம் (நான் என்னத்த கண்டேன் ?) எனக்கும் ன்னு இழுக்கறதுக்குள்ள,

வாண்டை  தேடி வந்த அதோட அம்மா , இங்கியாடா இருக்கே..? உன்ன ஊரெல்லாம் தேடறேன்... வா இங்க சொல்றேன் ன்னு முகுது ல  பட் னு ஒரு சாத்து சாத்தி (எனக்கே வலிச்சுச்சு) தூக்கிட்டு போக..குழந்தை போகிற போக்கிலே சும்மா இருக்காம, அம்மா, அந்த ராமு மாமா தாத்தாவோத (ட) பேனாவ திதிந்து (திருடிக்கொண்டு) போயித்தா என்றது !

அந்த அம்மாவிட..அப்பா”, ங்க யாருங்க அந்த ராமு மாமா என்றார்?
அந்தம்மா கூலா..நீங்க வேற..குழந்தை யாரை பாத்தாலும் ராமு மாமான்னு தான் சொல்லும் என்றபடி போய்கொண்டே இருந்தாங்க.

கிழிஞ்சுது போ. .என்று அப்பா என்னை பார்த்து முறைக்க, நான் எதுவும் செய்ய இயலாத ஒரு பார்வையுடன் அந்த பார்வையை எதிர்நோக்க ...

குழந்தையிடம் அம்மா..ஏண்டா இப்படி ஒரு ஒட்டைவாயா இருக்க? எல்லாம் என் போறாத காலம் ன்னு சொல்லி முடிக்கலை; குழந்தை பட்டுன்னு எட்டூருக்கு கேட்கிற மாதிரி எல்லா வாயும் ஓட்ட வாய்தாம்மா ன்னு கிளுகிளுன்னு சிரிச்சுது...

இப்ப பழமொழி :

ஆச்சானுக்கு பேச்சான்
மதனிக்கு ஒடம்பொறந்தான்
நெல்லு குத்துறவனுக்கு
நேர ஒடம்பொறந்தான்!!!



இதில உறவுமுறை ஏதும் புரியறதோ ?
சம்பந்தா சம்பந்தம் இல்லாம சம்மன் ஆகிறவங்களையும் இப்படி சொல்லலாம்.
குழப்புற உறவு முறையும் இப்படி கிண்டல் அடிக்கலாம் .

அது சரி..பேனா என்னாச்சு? அது போனது போனதுதான்...
நீங்க யாராச்சும் ‘அந்த மேற்படி  உறவுமுறைல பாத்தா,  நாங்க கேட்டதா சொல்லுங்க  :p

  
எண்ணங்கள் தொடரும் :)


Friday 27 September 2013

"மாதிரி"   Resembles

அவங்க மாதிரி, இவங்க மாதிரி, அது மாதிரி, இது மாதிரி அவங்க செய்யிறா மாதிரி , இவங்க செய்யிறா மாதிரி ன்னு எல்லாம் பேசறோமே , இந்த ஒப்பிடல் இல்லாம் ஒரு விஷயம் கூட இல்ல போலிருக்கு.

இதில முக்கியமா ஒரு விஷயம் :
இந்த ஒப்பிடலில் நல்ல விஷயம் இருந்துச்சுன்னா ஓகே. இல்லாட்டா அதனால் விளையும் மனச்சோர்வு, சலிப்பு இதெல்லாம் வாழ்நாள் தொடர் நரகம்.

சிலசமயங்களில் இந்த ஒப்பிடலில் தற்போது இல்லாதவரை குறிப்பிட்டு சொல்லப்படும் போது அவர் இது “போல (!) எதாவது ஒன்றில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே படும்.

பிறிதொரு சந்தர்ப்பங்களில் அந்த சமயத்தில் அந்த இடத்தில் இல்லாதவரை குறிப்பிட்டு அவர் போல / அது போல என்று குறிப்பிடப்படும்போது அவரின் “இருப்பு“ அங்கு  இருப்பது  உணரப்படும்!

உதாரணமாக..நான் போகாத ஒரு விழாவுக்கு என்  தோழி சென்றிருக்கும்போது அவள் கண்ணை யாரோ பொத்தி யாரு சொல்லு? எனக்கேட்க , “மாலாவா? அவள்தான் “இது போல செய்வாள் . .என கூறப்பட்ட பதில் பிடிக்காத கண் பொத்திய நபர், ஏன் நாங்க “அது மாதிரி செய்யமாட்டோமா? என்று சலுகையாக சண்டைக்கு வரலாம்! அந்த இடத்தில் இல்லாத மாலாவின் நினைவு / இருப்பு உணரப்படுகிறது இல்லையா?!

இன்னாரைப்போல ஜோரா எழுதுறார் என்றோ , அந்த ஆளா? ஹ்ம் அவனும் இவனைப்போல கடி ஆசாமிதான் என்றோ கூறக்கேட்டிருக்கலாம்.

இன்னும் கூட சிவாஜியின் நடிப்பு த்தாக்கம் இல்லாத நடிகர் இருக்க முடியாது
நவீன எழுத்தில் சுஜாதா போல எழுதாதவர் அரிது. அவர் “போல எழுத முயற்சியாவது செய்திருக்கக்கூடும்.
நமக்கு பிடித்தவர்களின் மேனரிசம் “போல நமக்கும் வருவது இயல்பே.

இது போல, இந்த மாதிரி, நிறைய சொல்லிகிட்டே போகலாம்.

நானும் உங்களைப் “போல எழுத  வந்திருக்கிறேன் !!!





நீங்க கல் எடுத்துண்டு வந்தாலும் கமென்ட் எடுத்துண்டு வந்தாலும் எனக்கு ரெண்டுமே ஓகே.. !

ஆனா நான் இப்போ ஜூட்டு !