Sunday 13 October 2013

கொலு மஹாத்மியம்

இது ஆரம்பமுமல்ல. முடிவுமல்ல.
ஆரம்பம் என்பதையே  நாம் இடையில் தான் அறிகிறோம்.
முடிவையோ அறிந்து கொள்வதே இல்லை.

நானும் இதை எதற்கு ஆரம்பிச்சேன்னு நடுவில் சொல்லிவிடுகிறேன்!
இல்லாட்டா முடிக்கறதுக்கு முன்னாடியாவது சொல்லிடறேன் !!

ஒரு வழியா தசரா  கொண்டாட்டம் லாம் முடிஞ்சுது.
நிறைய பேர் கொலுவை ஃ போட்டோவாகவும் ஸ்டேட்டஸாகவும் போட்டு
ஃ பேஸ் புக் மொத்தமும் ஜோரா  கலகலன்னு இருந்துது...

சின்ன வயசு கொலு கொண்டாட்டங்களையும்
ஃ பேஸ் புக்குக்கு முந்தின கொலு கொண்டாட்டங்களையும் நினைத்து பார்க்கிறேன்! (வேற வழி!) கொலு இல்லைதான் . அதுக்கு நான் ஒண்ணும் ஸ்டேட்டஸ் ஸும் போடலைதான். அதுக்காக உங்களை அப்படியே நிம்மதியா வுட்டுட்ட முடியுமாங்கிறேன். நான் கன்னா பின்னா ன்னு யோசிச்சதை ல்லாம்
இங்க கொட்டி களேபரம் பண்ணாம!?

ஸ்கூல் படிக்கிற வயசில வேஷங்கட்டிண்டு கொலுவுக்கு அழைக்க போவோம். ராதா கிருஷ்ணன், பாரதியார், கிராமத்து பெண், சேட்டு மார்வாடி அலங்காரம் , வில்லும் அம்புமா இராமன் , மடிசார் மாமி இன்ன பிற எல்லாம். நாங்க அக்கா தங்கைங்க மூணு பேரு, அக்கம்பக்கத்து செட்டு ஒரு அஞ்சு பேரு. ஆக எட்டு பேரும் அதகளம் பண்ணிருக்கோம்.  

நாங்க இப்படி கும்பலா வரதை பார்த்து சந்தோஷப்பட்டவர்களும் உண்டு. கதி  கலங்கி போனவர்களும் உண்டு. பின்ன..? எங்க செட்டுல யாராச்சும் எங்கயாவது ஒரு பொம்மைய யாச்சும் உடைக்காம வந்ததில்ல...!

பாடச்சொல்ல வேண்டியதுதான்.. பாடச்சொன்னதும்....நாங்கல்லாம் கொஞ்சங்கூட பிகு பண்ணிக்கவே மாட்டோம்...கோரஸா..
“உண்மை பேசும் காந்தியாம்
உலகம் புகழும் காந்தியாம் ன்னு எடுத்து விடுவோம்!
ஸ்கூல் பாட புக் ல இருக்கிற பாட்டை.!
போரும் போரும் ன்னு சுண்டல் குடுத்தா கூட நிறுத்தாம
மூச்சு விடாம பாடி முடிச்சிட்டு தான் நிறுத்துவோம்.
ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் அஞ்சு  வீடு கணக்கு.
அஞ்சு வீட்லேயும் இதே பாட்டுதான் !!

வரப்போ...இது என் சுண்டல்,,
இல்லே இதுதான் என்னோடதுன்னு அதுக்கு ஒரு ரகளை...
வேஷம் லாம் அங்கே இங்கே அவுந்து தொங்கும்..
ஒரு கையால அதையும் பிடிச்சுண்டு மல்லு கட்டுவோம்..

அடுத்தநாள்....வேற வேஷம்.. வேற தெரு.. வேற வீடு..வேற பாட்டு.

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு முகத்தில் கண் இரண்டு
மூன்று முக்காலிக்கு கால் மூன்று
நான்கு நாற்காலியின் கால் நான்கு ‘
ஐந்து ஒரு கை விரல் ஐந்து
ஆறு ஈக்கு கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்திக்கு கால் எட்டு
ஒன்பது தானிய வகை ஒன்பது
பத்து இரு கை விரல் பத்து ன்னு ராகமா இழுத்து பாடுவோம்..!!

அதோட வீட்டுலேயும் அப்பாவோட வெள்ளை வேஷ்டி எடுத்து திரை கட்டி வேஷ்டிக்கு பின்னாடி விளக்கு வைச்சு,  விரலை மடக்கி நிழலில் மான், நாய் குரைக்கிறது, தாத்தா & பாட்டி ன்னு பயாஸ்கோப்பு வேற காட்டுவோம்!

எதுக்கு ஆரம்பிச்சேன்னா அம்மா இருக்கிறப்போ..அத்தனை பண்டிகைகளிலும் கொலுவுக்கு தனி முக்கியத்துவம் இருக்கும். சீமந்த புத்ரி நான் பிறந்த பண்டிகை காலம் என்பதால் கூட இருக்கலாம் :p

அவ்ளோ கொள்ளை கொள்ளையா பொம்மை...! பெரிசு பெரிசா அகல அகலமா ஒன்பது படி வைத்து மேல்படி ரெண்டு ஓரத்திலும் ரெண்டு பெரிய தார் ட்ரம் வச்சு பெரிய ஊஞ்சல் பலகை, அடுத்த படி, ஹாலோ ப்ளாக் கல் அடுக்கி  வச்சு அதில் ஒரு பெரிய நாலடிக்கு ரெண்டடி பலகை, அதுக்கு அடுத்த ரெண்டு படியும்  இன்னும் அகலமான ரெண்டு பென்ச். நாலாச்சா?  அப்புறம் சின்ன பலகை வரிசையா மூணு, ஏழாச்சா? கடைசி ரெண்டு படி, ஒரு படிக்கு பெரிய டிரங்க் பொட்டி ரெண்டு, கடைசி படிக்கு என்னோட அலுமினிய ஸ்கூல் பெட்டி! செட்டியார் கடை சாமான்லாம் சொப்பு ல  வைக்க!  அதிலும் பொம்மையை நெருக்கமா வைக்கணும் ..அதுவும் போதாமல் அலமாரி ஃ புல்லா அஞ்சு அலமாரியிலும் பொம்மைகள். இது போக பார்க், ஸ்கூல்,  கடைத்தெருன்னு சீரியல் லைட் லாம் போட்டு ஜகஜ்ஜோதியா இருக்கும். பார்க் ரெடி பண்ண ஒரு வாரம் முன்னாடியே கடுகு / கேழ்வரகு விதைத்து காம்பவுண்ட் ரெடி பண்ணுவோம்.

பெரிய பொம்மைகள்...பரம்பரை பொம்மைகள், அப்பப்போ பார்த்து பார்த்து வாங்கின பொம்மைகள்ன்னு அவ்ளோ இருக்கும்.  அம்மாவோட அம்மா குடுத்த பாஸ்போர்ட் சைஸ் ஸ்ரீ நிவாசனே ஒரு ரெண்டடி இருப்பார். தவிர பள்ளி கொண்ட ரெங்கநாதன், ரெண்டு பக்கமும் வாழை தோரணத்துடன் அபயஹஸ்த சத்யநாராயணா, ஆர்ச் கட்டி ஊஞ்சலாடும் ராதா கிருஷ்ணன், சுற்றிலும் ஆறு கோபிகைகளுடன் கிருஷ்ணன், ராம, லக்ஷ்மண, சீதா ஹனுமனுடன் மஞ்ச மஞ்சேல் ன்னு ஒரு செட், முக்குருணி விநாயகர். நடுவாந்திரமான பொம்மைகள் ஸ்ரீ சாரதாம்பாள்,  முத்தேவியர், ஸ்ரீ ஆண்டாள், வள்ளி தெய்வானையுடன் முருகன், தேவி கருமாரி அம்மன், லக்ஷ்மி சரஸ்வதின்னு. அப்புறம் செட் பொம்மைகள் ன்னு பார்த்தா  தசாவதார செட், கல்யாண செட் (ஃபோட்டோ கிரா ஃபருடன்!) , கிரிக்கெட் செட், நாத்து நடுவதிலிருந்து மூட்டையை  லாரியில் ஏத்தி சந்தைக்கு அனுப்புவது வரை இருக்கிற விவசாய செட், ஐஸ் வண்டிக்காரனுடன் நான்கு ஸ்கூல் பசங்க செட், ன்னு செட் பொம்மைகள். விவேகானந்தர், அவ்வை, வள்ளலார், காந்தி, புத்தர், கன்னத்தில் கை வச்சுக்கிட்டு தொப்பி போட்ட பொம்மை ..தவிர வித வித பறவைகள்...னு குட்டி குட்டி பொம்மைகள் கணக்கிலடங்கா.  



அத்தனையையும் பொறுமையா பிரிச்சு எடுத்து வைப்பதிலாகட்டும், எந்த பொம்மையை  எங்கே வைப்பது என்ற நிர்வாக ஆளுமையிலாகட்டும் அம்மாக்கு நிகர் அம்மாதான்.

கொலு முடிஞ்சதும் பொம்மைகளை எல்லாம்  ஒருநாள் படுக்க வைக்கணுமாம்.. ஒன்பது நாள் நின்ற களைப்பும் அலுப்பும் போக.! அதுக்கப்புறம் தான் எடுத்து வைக்கணுமாம்.

அதை எல்லாம் எடுத்து வைப்பதுதான் மகா மகா பெரிய நொச்சு வேலை.
அளவான துணி கிழித்து பொம்மைகளை அதில் சுற்றி கட்டி மெருகு குலையாமல் எடுத்து வைப்பதில் அம்மாவை அடிச்சுக்க ஆளே கிடையாது. அத்தனை  பொம்மைகளும் அந்த பெரிய தார் ட்ரம் க்குள் அடைக்கலமாகும். தார் ட்ரம் ன்னா தார் பூசியிருக்கிற ட்ரம் இல்லை .அதுக்கு red oxide ப்ரைமரி கோட் அடிச்சு பெயின்ட் பூசி ஐந்தடி உயரமும் ரெண்டடி குறுக்களவுமா இருக்கும். மிச்ச சின்ன பொம்மைகள் எல்லாம் ட்ரங்கு பெட்டி மற்றும் பெரிய தவலை க்கு போகும். பரணில் தூங்கும் அடுத்த கொலு வரை.

ஈவிரக்கமில்லாத கொலை ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனால் அதை பார்த்து இருக்கீங்களா? அனுபவிச்சு இருக்கீங்களா நீங்க ?

அம்மா இறந்த வருஷம் நான் கோவை ஈஷா மையம் சென்றிருந்த போது
அப்பா அத்தனை பொம்மைகளையும் ......  அ  த்   த்  த  னை  ....... பொம்மைகளையும் ஒழிச்சு கட்டி விட்டார். ஒரு துண்டு துணுக்கு கூட இல்லை. 
என்ன பண்ணினார்?.. எப்படி அவ்வளவையும்? என்ன தான் செய்தார்?
எதுக்கும் பதிலில்லை. இதை என்னால் கொஞ்சங்கூட தாங்கிக்கவே முடியவில்லை. ஒருமாதம் பித்து பிடிச்சது போல இருந்தேன்.

இப்படி ஒரு மனுஷனா? ஆனாலும் எனக்கு இன்னமும் அப்பா தான் சகலமும்.
இன்னமும் பயப்படுவேன் அவர் வேண்டாம்ன்னு சொன்னதை செய்ய.


ஆனாலும் நான் முதலிலிருந்து தொடங்குவேன்.  என்றேனும் !


15 comments:

  1. இந்த கட்டுரை சூப்பர்ங்க...
    முடிவில் கண்ணீரின் பின்னே
    தொனிக்கும் உறுதி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிவா...ஆம். உறுதியேதான் :) (y)

      Delete
  2. மாலா, அந்த முதல் தொடக்கம் எப்போ...???.என் பங்குக்கு நான் பிள்ளையார் பொம்மை வாங்கித் தருவேம்ப்பா....

    ReplyDelete
    Replies
    1. செல்ஸ்... :) லவ் யூ டா.
      கண்டிப்பா...! நீ வாங்கித்தரும்
      உன் பிள்ளையர் பொம்மையுடனேயே தொடங்கட்டும் எனது சந்தோஷ கொலு :)

      Delete
  3. அருமையான மனதை தொடும் எழுத்து நடை. திடீரென்று அப்பா அப்படி செய்ய காரணம் அம்மா மேல் இருந்த அதிக அன்பாகத்தான் இருக்கும். ..
    சீக்கிரம் ஆரம்பிங்க வர வர எங்க ஏரியாவுல சுண்டல் கிடைக்க மாட்டேன்கிறது. என் பங்குக்கு சுண்டல் சாப்பிட வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ...பேஷா வாங்க.!
      கொலு வச்சாதான் வந்து சுண்டல் சாப்பிடணுமா என்ன?
      வரதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை சொல்லுங்க..
      சுண்டல் ரெடியாக்கி வச்சிடறேன்.. :)

      Delete
  4. நல்ல நினைவலைகள். அப்பா எதற்கு அப்படிச் செய்தார்?

    ReplyDelete
    Replies
    1. சொல்லுவாங்க எல்லாரும் அன்பின் மிகுதியால் ன்னு...ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை.
      கஷ்டமா தான் இருக்கு..என்ன பண்றது..நடந்துடுச்சு.. ..!

      Delete
  5. வர்ட் வெரிஃபிகேஷன் படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. இனிமே படுத்தாது., சமத்தாயிடுத்து :)
      எடுத்துட்டேன் :)

      Delete
  6. படிச்சதும் பிரமை பிடிச்சுபோய்.. சரி இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா...ரிஷபன் சார் ! இதெல்லாமே கடந்தது தானே !

      Delete
  7. ஒவ்வொருவருக்கும் அவரவர் தரப்பு நியாயங்கள்..! உங்கப்பா உங்கம்மாவை எவ்வளவு நேசிச்சிருந்தா, அவங்கள ஞாபகப்படுத்துற எல்லாப் பொம்மைகளையும் காணாமப் போக்கியிருப்பார்..? பாஸிட்டிவ்வா யோசிங்க..!

    (அட்வைஸ் பண்றது ஈஸி... இருந்தாலும்...)

    ReplyDelete
  8. ullathil ullathai ezhuthiyirukkireerkal

    ReplyDelete
  9. ullathil ullathai ezhuthiyirukkireerkal

    ReplyDelete