Saturday 26 October 2013

அன்பெனப்படுவது யாதெனில் !

                                அன்பெனப்படுவது யாதெனில் !

அந்த ஏழு வயது சிறுமி துள்ளி ஓடி வந்த வேகத்தில் தன் பட்டுப்பாவாடை தடுக்கி விழுந்தாள். கூட இருந்த சிறுவர்கள் கூட்டம் கொல்லென்று சிரிக்க அந்த சிறுமிக்கு துக்கமும் அவமானமுமாக உதடு அழுகையில் பிதுங்கியது. கூட்டத்தில் அவள் வயதொத்த ஒரு சிறுவன் மட்டும் உடனே கூட்டத்தை விலக்கி ஓடிவந்து தன் இரு கை நீட்டி அவள் பற்றிக்கொள்ள  உதவி அந்த குழந்தையை எழுப்பி விட்டான். சிறுவர்கள் கூட்டம் சட்டென்று அமைதியில் கலைந்தது.

அந்த குழந்தையின் குளுமையான அழகு விழிகள் அவன் மனதில் சித்திரமாய் பதிந்தது. அந்த குழந்தைக்கும் அவனின் கருணையும் பெரிய மனுஷ தோரணையுடன் வந்து தன்னை தூக்கி விட்டு அழைத்து சென்ற லாவகமும் மனதில் தங்கியது.

வாழைத்தோரணம், நாதஸ்வரம் மேளம்,.பளபளவென்று பட்டும் நகையுமாய் பெண்கள் கூட்டம். கல்யாண வீடுகளுக்கே உரித்தான கலகலப்பு அங்கே கோலோச்சியது.

விழுந்த குழந்தை தன் அம்மாவை தேடி அவனுடன் நடக்க, எதிரே வந்த அவன் அம்மா யாருடா இந்த செல்லகுட்டி என்றாள்? அம்மா...இவ அங்கே வாசல்ல விழுந்துட்டா ம்மா. எல்லாரும் சிரிச்சாங்க..என்று சொல்லி முடிப்பதற்குள்  இவன்தான் என்னை தூக்கி விட்டான்ம்மா என்றது அந்த அழகு பெண் குழந்தை. சிறுவனுக்கு முகமெங்கும் மத்தாப்பு..ஹீரோ தோரணை! அப்படியா செல்லம்? எங்க உன் அம்மா? யாரு சொல்லு ? என்று அந்த பெண்மணியும் அந்த குழந்தைகளுடன் நடக்க அந்த சமயத்தில் எதிரே வந்த அந்த பெண் குழந்தையின் பெற்றோர்கள் தன் மகளுடன் கூட வருபவர்களை ஒரு குழப்பத்துடன் எதிர்  நோக்க ..அம்மாஎன்று அவளிடம்  ஓடி அப்பாவின் தோள்களில் ஏறி ஊஞ்சலாடியது அந்த குழந்தை. என்னாச்சு தீபா செல்லம் ?
குழந்தை மறுபடியும் ஆக்ஷன் ரீப்ளே ! சிறுவனுக்கு மறுபடி பரவசம். சரி வா..என்று தீபாவுடன் அவர்கள் திரும்பி நடக்க சிறுவனுக்கு தனது உயிரே போவது போல துடித்து போய்விட்டான்.   அம்மா...என்னம்மா இது என்று தன அம்மாவை  பார்க்க அம்மா ஒன்றும் சொல்லாமல் அவன் கையை பிடித்துக் கொண்டு எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தாள். அவனோ கூட வர முரண்டு பிடித்தான்.

இன்னும் பத்து வருடங்களில் இந்த உறவினர்கள் பல முறை பல கல்யாண விசேஷங்களில் சந்தித்து கொண்டாலும் பேசவே இல்லை. ஆனால் தீபாவும் சுந்தரும் மாறவேயில்லை.

தடுத்து பார்த்தார்கள். அவர்களுக்குள் இன்னும் ஆழமாக வேர் பரப்பியது நேசம். இது நேசம் என்பதை இருவரும் உணர்ந்திருந்தாலும் வெளிப்படுத்திக்கொண்டதில்லை.

இருவரும் காலேஜ் பருவத்தில் இருக்கும் போது சுந்தர் தைரியமாக நலம் விசாரித்து ஒரு கடிதம் எழுதினான். பதிலுக்கு தீபா சுந்தருக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்பினாள்.

குடும்ப நிகழ்ச்சிகளுக்கு இருவரும் சேர்ந்து போகாதபடி இரு தரப்பு பெற்றோர்களும் பார்த்துகொண்டார்கள். ஆனாலும் அவர்கள் ஏதோ ஒரு சமயங்களில் சந்தித்து கொண்டு தான் இருந்தார்கள்.

இந்த சமயத்தில் விதி வேறுவிதமாக அவதாரம் எடுத்தது.தீபாவால்  நிற்க முடியவில்லை..அவ்வப்போது நடக்கும்போதே விழுந்து விடுவாள். நான் ஏன் விழுகிறேன் என்பதே எனக்கு புரியவில்லை ..அம்மா அப்பாவோ நீ கவனமின்றி நடக்கிறாய் அதான்..என்றார்கள்..இதுபோல தீபா அடிக்கடி கீழே விழ பிரச்னையின் தீவிரம் செவிட்டில் அறைந்தது. டாக்டரிடம் கூட்டிப்போனார்கள். தசையை பலவீனமாக்கும் Progressive Muscular Distrobi (ப்ரோக்ராசிவ் மஸ்குலர் டிஸ்ரோபி ) என்றார்கள். அதற்கு தனிப்பட்டு ஏதும் சிகிச்சை இல்லை என்றும் பயிற்சி மூலம் தசைகளை இயக்கி பலப்படுத்த வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்கள்.

தீபாவின் பெற்றோர்கள் கலங்கி போன அளவுக்கு தீபா  கலங்கவில்லை. படித்தாள். பயிற்சியில் தீவிரம் காட்டினாள். Staff Selection பரிட்சையில் தேர்வாகி மத்திய அரசு பணிக்கு  டெல்லியில் வேலைக்கு ஆர்டர் வந்தது. அவ்வளவு தூரம் வேலைக்கு போகவேண்டாம் என்றதை பிடிவாதமாக வென்று டெல்லி வந்து வேலைக்கு சேர்ந்தாலும் அந்த சீதோஷ்ண்நிலை ஒத்துகொள்ளாமல் பணி மாற்றம் வாங்கி மறுபடி புறப்பட்ட இடத்துக்கே.

இந்த காலகட்டத்தில் சுந்தர் இன்ஜினீயரின் முடித்து வெளி நாட்டில் வேலைக்கு சென்று,  விடுமுறையில் வீடு திரும்பியபோது தீபாவுக்கு திருமணமாகியிருக்கும், குழந்தைகள் கூட இருக்கலாம் என்ற எண்ணத்தில் விசாரிக்க தீபாவின் உண்மை நிலையறிந்து திகைத்து போய் தீபாவை சந்திக்க போன போது ......

பட்டுப்பாவாடையில் துள்ளித்திரிந்த தீபா மனக்கண் முன்பு வலம் வர, எதிரே சுந்தரை பார்க்க சிரமப்பட்டு எழுந்த தீபா சுவரை பிடித்து கொண்டு வந்த காட்சி சற்றும் நம்பமுடியாததாக இருந்தது.

காதல் உணர்வுகள் மனம் முழுக்க இருந்தாலும் அதை வெளிபடுத்திக்கொள்ளாமல் மவுனமானாள் தீபா.திருமணம் பற்றி எல்லாம் சிந்திக்கவே இல்லை என்றாள் சுந்தரிடம்.

சுந்தர் ஒன்றும் பேசத் தோன்றாமல் திரும்பி மீண்டும் வெளி நாட்டுக்கு போய் அங்கிருந்து “உன்னை எனக்கு தருவாயா தீபா ? என்று ஒரு கடிதம் போட்டார். அப்படி எல்லாம் ஒரு வாழ்க்கைக்கு நான் ஆசைப்படவில்லை என்று கூறிவிட்டாள் தீபா. ஆனால் மனம் முழுக்க கொழுந்து விட்டெறிந்த காதல் ஜோதியை இருவரும் உணர்ந்தாலும்   தீபா வாயே திறக்கவில்லை. சுந்தர் பிடிவாதமாக உன்னைத்தவிர வேறு யாரையும் நான் மணக்க போவதில்லை. உன் மனம் மாறினால் சொல்லி அனுப்பு என்று கூறிவிட்டார். கடைசியில் தீபா சம்மதிக்க இரு வீட்டாரும் எதிர்க்க ..சுந்தர் உறுதியாய் தீபாவின் கரம் பிடித்தார்.
இதுவரை ஒரு சாதாரண காதல் கதை. இனிமேல்தான் இருக்கு கதையின் அச்சு.

மணமான மறுநாளே தனது அன்பை அதிரடியாய் காட்ட துவங்கினார் சுந்தர்.
ஆம். எங்கு சென்றாலும்  தனது மனைவியை அலாக்காக தூக்கி கொண்டே சென்றார். முதலில் விளையாட்டு என்று நினைத்தார் தீபா. ஆனால்..குடும்பவிழா, கோவில், பார்க், பீச் எங்கு சென்றாலும் தன மனைவியை தூக்கி கொண்டே சென்றார் சுந்தர்.
தீபாவிற்கு கண்கள் பனிக்கின்றன...இவ்வளவு அன்பான மனிதர் இங்கே இருக்கிறார் என்பதை நான் எல்லோருக்கும் சொல்ல விரும்புகிறேன். உலகத்திலே மிகுந்த அதிர்ஷ்ட சாலி நான் என்பதையும் இந்த உலகிற்கு எடுத்து சொல்ல விரும்புகிறேன். அது மட்டுமல்ல..பார்த்து கொண்டிருந்த வெளி நாட்டு வேலையையும் விட்டு விட்டு எனக்காக இங்கே இருக்கிறார். என்னையும் வேலை பார்க்க அனுமதித்திருக்கிறார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிரண்டு வருடத்திலேயே   சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கை என்று முடங்கி விடுகிறார்கள். தீபாவின் பிடிவாதமும் தன்னம்பிக்கையும்  தான் இந்த அளவுக்கு அவரை பலத்தோடு வைத்திருக்கிறது ..அதனால் தான் நன் அவளை வேலைக்கு போக வேண்டாம் என்று கூறவில்லை  என்றார். காலேஜ் போகும் வயதில் ஒரு அழகு மகள் இருக்கிறாள் இந்த தம்பதிகளுக்கு . இந்த அன்பை என்னென்பது !  
19,10.2013 தினகரனிலிருந்து.        


4 comments:

  1. எங்கு சென்றாலும் தனது மனைவியை அலாக்காக தூக்கி கொண்டே சென்றார்//
    படிக்கும்போதே அந்த தம்பதியின் நேசம் குறித்து பெருமிதம் அன்பில் இருவரும் சளைத்தவர்கள் இல்லை.. இம்மாதிரி மனிதர்கள் வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்டுகிறார்கள் !

    ReplyDelete
  2. படித்தேன்.
    நெகிழ வைக்கிறது.

    ReplyDelete
  3. காதல் என்ற வார்த்தைக்கு உண்மையான பொருளைத் தரும் தம்பதியர்.

    ReplyDelete