Saturday 16 November 2013

கலியன் விட்டதை கலியில் விடாதார்.




தீபாவளி சமயம் பங்குச்சந்தை உச்சத்தில் இருந்ததாம் . சேட்டுகளுக்கு சமமாக ஐயங்கார்களும் அய்யர்களும் இந்த சந்தையில் பணத்தை கொட்டுபவர்களாம்.
உதார குணம் கொண்டவர்களும் இந்த சந்தையை விடுவதில்லை என்று கேள்வி . அத்யயனம் செய்தவர்கள் கூட இதில் சேர்ந்துகொள்கிறார்களாம்.
தொழில் முதலீட்பாக ஆரம்ப பங்குகளில் பங்கேற்பது என்பது வேறு. சூதாட்ட ரீதியில் பங்குகளில் பணம் போடுவது என்பது வேறு.

பங்குச்சந்தை உச்சத்தில் ஏறிவிட்டால் ஏதோ பரமபத வாசல் திறந்தாலும் கிடைக்காத பூரிப்பு சந்தைக்காரர்களுக்கு . வரப்போகிற தேர்தலையொட்டி முன்னாலேயே எல்லாம் விற்று காசாக்கி விட வேண்டும் என்று அரசியல்வாதிகளின் சதியால் பங்குச்சந்தை விலை ஏறிக்கிடக்கிறது என்றே தோன்றுகிறது. . அல்லது, எதுவும் யாருக்கும் திருப்தியாய் இல்லை . பங்குச்சந்தையாவது விலை ஏற்றி வைத்தால் நாடு சுபிக்ஷமாக இருக்கிறது என்று சில சாராராவது மாயத்ருப்தி அடைவார்கள். அது எதற்கும் ஓட்டுக்கும் உதவும் என்ற தந்திர நோக்கத்தில் அரசியல்வாதிகள் விரித்துள்ள மாய வலை இந்த பங்குச்சந்தை விலை ஏற்றம் என்றாவது எடுத்துக்கொள்ளலாம்.
அபரிமிதமான சுபிக்ஷதுக்கு குறி ஏதும் இல்லாமல் பங்குச்சந்தை மட்டும் உச்சத்திற்கு விலை ஏறியிருக்கிறது. கிருஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னால் கஜகர்ணம் போட்டாவது ஏற்றி  விற்றுச் சுருட்டவேண்டும் என்று வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் உத்தியாகவும் இருக்கலாம்.

ஆனால் எதுவும் நன்மைக்கில்லை.

இந்த கார்த்திகை மாதத்தில் நம் கண்ணுக்கு கண்ணான கலியனை நினைக்க வேண்டும். அவர் சூதாட்டம் ஆடுவாராம். ஏன் என்றால் அவருக்கு யம பயம் நெஞ்சில் ஏற்படாததால் செய்தேன் என்கிறாராம்.

சூதினைப் பெருக்கி, களவினைத்துணிந்து சுரிகுழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் நமன்தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன், வேலை வெண்டிரை அலமரக்கடைந்த நாதனே ! வந்து உன் திருவடி அடைந்தேன், நைமிசாரணியத்துள் எந்தாய் !  (நா.தி.பி. 1000)

முன்னர் நான் ஆடிய சூதாட்டத்துக்காக யமன் கறுவிக் கொண்டிருக்கிறான் என்று இப்போது பயம் வந்து விட்டது நைமிசாரண்யத்து நாதனே! உன் திருவடிதான் இனி என்னை காக்கும் என இப்போது வந்துவிட்டேன் என்கிறார்.

ஒரு விதையை போட்டால் பூமாதேவி அதையே நூறு ஆயிரம் தானியம் பூ காய்களாக்கி தருகிறாள். வேதம் ஓதி சடங்குகளும் நடத்தி கொடுத்தால் தெய்வானுக்ரஹம் கிடைக்கிறது. தொழில் செய்தால் அதன் பொருள் அல்லது சேவை பிறரின் தேவைக்கு உதவுகிறது. இவற்ற்டால் கிடைக்கும் பணம் உலகிற்கு நன்மை விளைவித்து பெறுகின்றதாகும்.

பங்குச்சந்தை சூதாட்டத்தில் மேற்கண்ட ரீதிகளில் எந்த நன்மையையும் விளைந்து பணம் வராது. வருகின்ற பணமும்  கலிபுருஷன் அளிக்கும் பிரஸாதமாம். பாபமே பண உருவில் கை மாறுகின்றது .

பரீட்சித்து மகாராஜா தான் இந்த கலியுகத்தின் முதல் சக்ரவர்த்தி.  காலமும் மக்களும் கெட்டு போவதை பரீக்ஷித்தின் நல்ல உள்ளம் வெறுத்தது. கலியை வாழ விட்டால்தானே இந்த யுகம் கெடும் என்று கலிபுருஷனை பிடித்து கொல்லவே போய்விட்டான். கலிபுருஷன் சரணாகதி செய்துவிட்டான். “நான் ஓடி விடுகிறேன்  என்றான். எல்லோருக்கும் வானத்தின் கீழ் ஒரு வாழ்வு உண்டு. எனக்கு எங்காவது ஒரு இடம் கொடு என்று கேட்டான் கலி. பரீக்ஷித்து பத்து இடங்களை கொடுத்தான்.
அதில் முதல் இடம் சூதாட்டம்.
இரண்டாவது குடி.
மூன்றாவது ஒழுங்கீன பெண்டிர்
நான்காவது மாம்ஸ போஜனம்
இன்னும் எதாவது இடம் கிடைக்காதா  என்று கலி வேண்டியதால் அடுத்ததாக தங்கத்தில் இடம் கொடுத்து வசிக்க சொன்னான்.இங்கு தங்க(ம்) என்று இடம் கொடுத்து பணத்தில் இருக்க சொன்னான் என்று பொருள். தங்கம் அக்காலத்து நாணயம். பணத்தில் கலிபுருஷன் இருப்பதால்தான் எத்தனை  அநியாயம் செய்தாவது நாம் அதை சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்ற ஈர்ப்பு ஏற்படுகிறது. பொய், திமிர், காமம், கோபம், பொறாமை ஆகியவையும் கலியின் வாசஸ்தானமாக பரீக்ஷித்து ஒப்புக்கொண்டான். (பணம் மஹாலக்ஷ்மியாச்சே! அதில் கலிபுருஷன் இருப்பானா என்று நினைக்கலாம். மஞ்சள் லக்ஷ்மியின் வாசஸ்தானம் தான். அதில் அதை அரிக்கும் வண்டும் வாழத்தொடங்குகின்றதே . ஸாஸ்த்ரம்  முறையாக வந்த பணம் தான் மஹாலக்ஷ்மி என்று சொல்வதாக அறிய வேண்டும் )

ஒருவர் பங்கு வாங்கினார் என்று வைத்துக்கொள்வோம். நினைத்துக்கூட பார்க்கவில்லை. சடார் என்று நாலு நாட்களில் விலை ஏறிவிட்டது. கொள்ளை லாபம் . விற்று விட்டார். அடுத்த நாள் அவருடைய பெண் சொல்கிறாள். நான் நாலு நாள் முன்னாடி பங்கை விற்றேன் . என் துரதிர்ஷ்டம், அது சடார் என்று விலை ஏறிப்போச்சு. நான் வாங்கின விலைக்கும் விற்ற விலைக்கும் ஏக நஷ்டம். இப்போது நஷ்டத்துக்கு மேல் நஷ்டம். என் பங்கு நான் விற்றவுடன் சடார் என்று விலை ஏறிவிட்டது என்று சொல்லி கண்ணீரே வந்து விட்டது. அப்பா வாங்கியதும் அதே பங்குதான், பெண் விற்றதும் அதே பங்குதான். இப்போது அப்பாவுக்கு வந்த லாபம் அவர் பெற்ற பெண்ணின் கண்ணீரோட வந்துள்ளது. பெண்ணின் கண்ணீர் அல்லது இதே போல் யாருடைய கண்ணீரோ ? பெண்ணின் கண்ணீரை கண்ட பின்பும் அந்த் லாபத்தை ஏற்றுக்கொள்ளுமா மனது ?  Exchange ல் அப்பாவும் மகளும் லாப நஷ்டங்களை நேரடியாகவே settlement பண்ணிக்கொள்ளலாம் “ என்று சொல்லிவிட்டால் அப்பாவின் மனது என்ன சொல்லும்? பெண்ணிடமிருந்து பணம் வாங்கிக்கொள்வாரா? கண்ணுக்கு தெரியாத கண்ணீர் மூலம் Exchange வழியாக லாபம் வருவதால் இசைந்துவிடலாமா?

லாபம் வருகிறது என்று யார் சொன்னார்கள்? போட்டதெல்லாம் போச்சு ஸார் என்று குமுறுபவர்களே அதிகம். சூதாட்ட காயை நகர்த்தும் பணமலைகளான Mutual Fund களே மண்ணை கவ்வும் போது செய்தித்தாள்களில் பரப்பப்படும் நூற்றுக்குத்தொண்னூறு பொய்த்தகவல்களால் நம்பிப்போட்ட பணம் மண்ணை கவ்வாமல் என்ன செய்யும்.
Tips எல்லாம் pits.!

*இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட நேரத்திற்கு விலை போட வேண்டும்.

*சூதாட்டத்தி நினைத்தும் பேசியும் படித்தும் ஆராய்ந்தும் செலவழித்த நேரத்திற்கு விலை போட வேண்டும்

*சூதாட்டத்தில் மனம் பதைத்ததிற்கும் வருத்தத்திற்கும் விலை போடவேண்டும்

*இதனால் இரத்தம் கெட்டதற்கு விலை போடவேண்டும்

*பங்கு விலை சரிந்து ஏற்பட்ட நஷ்டத்தை கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும்

*இழந்த தன் சௌக்கியத்திற்கும், குடும்ப சௌக்கியத்திற்கும் விலை போடவேண்டும்

*வங்கிகளில் முதல் போட்டிருந்தால் வந்திருக்க கூடிய வட்டியை இழந்ததிற்கும் நஷ்டக்கணக்கில் கூட்டிக்கொள்ளவேண்டும்

*ஏதாவது லாபம் என்று வந்திருந்தாலும் அது கலிபுருஷன் கொடுத்த பணம். ஆதலால் யமன் கறுவிக்கொண்டிருப்பானே அதற்கும் சேர்த்து விலை போட்டு பார்க்க வேண்டும்

*இழந்த ஸ்வதர்மத்துக்கும் நஷ்டக்கணக்கை பார்க்க வேண்டும்

*தன் குடும்பத்திற்கும் தானே இந்த சூதாட்டத்தின் முன்னோடியாகி வம்சத்தையே கெடுத்த பாபத்திற்கும் விலை கணக்கிட வேண்டும்

*அப்புறம் லாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை சொற்ப லாபமும் இத்தனை விலை கொடுத்து வந்தது என்று நன்றாக புரியும்
ஏதோ எல்லோரையும் நன்றாக வாழவைக்க ஆசைப்படும் கலியனின் திருவுள்ளத்திற்காவது இந்த கட்டுரை உகக்கும் என்று எழுதி வைத்திருக்கிறேன் !

“ஸ்ரீ ரங்கநாத பாதுகா என்ற புத்தகத்திலிருந்து

ஸ்ரீ.உ.வே.நாட்டேரி  கிடாம்பி ராஜகோபாலாச்சார்யர், ஆசிரியர். 

No comments:

Post a Comment