Sunday 12 January 2014

ஆளிழுத்தல்

                           

தன் பெண்ணின் முகத்தில் நிலவும் ஒருவித அமைதியின்மை வள்ளியை கொஞ்சம் யோசிக்க வைத்தது. அவளும் இந்த பருவம் கடந்து வந்தவள் தானே..? வரட்டும்,, எதுவானாலும் அவள் வாயிலிருந்தே வரட்டும்..

தன் போக்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவள் மீனாட்சி கூப்பிடவும் கையை முந்தானையாயில்  துடைத்தவாறே,

“என்ன மீனுக்கண்ணு? இன்னுமா கிளம்பல காலேசுக்கு ? இம்மா நாளியா இன்னாத்தான் பண்ணுவியோ? சட் ன்னு கிளம்பு கண்ணு. இன்னாத்துக்கு இப்ப கூப்ப்ட்ட? என்றாள்.

“அம்மா..வந்து..இன்னிக்கு..அது வந்தும்மா... “

“இன்னாடி இது இவ்ளோ மாய்மாலம் பண்ணுரவ? இன்னத்துக்கு கைய பிசியற? இன்னா சொல்லு சுருக்க ? வண்டி வேல கெடக்கு தாயி என்றாள் மகளின் முகத்தை ஜாடையாய் ஆராய்ந்து கொண்டே... 

நானு..இன்னிக்கு..இல்ல இல்ல..இன்னியோட பரிட்ச முடியுதுல்ல..வந்து இன்னிக்கு ஒரு விஷயம் சொல்லணும் ...ம்மா..நானு.. “ வார்த்தை திக்கியது.

“சரி..நீ கிளம்பு..பொறவு திரும்பி வந்து பேசிக்கலாம்.உனுக்கும் நாளியாச்சு. இருக்குறது ஒரே பஸ்சு ..அத வுட்டா.. சைக்கிள் மெறிக்கணும்..அம்மந்தொலைவு!  போக ஏலாது கண்ணு..! பரிச்சையில்லா...? என்று பேச்சை கத்தரித்தாள் என்ன சொல்ல வருகிறாள் என்பது தெரிந்தே. தாயறியாத சூலா?!

மீனாட்சிக்கு சொல்லவும் முடியல. சொல்லாமல் இருக்கவும் முடியலை. ஒருவேளை இதை முதலில் அப்பாவிடம் பேசலாமோ? அம்மாவை விட அப்பா கொஞ்சம் இதம். சரி, சாயந்திரம் பாத்துக்கலாம் ன்னு முடிவு கட்டினாள் .

அம்மா உள்ளிருந்தே இவள் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள்.. ம்ம்..நடக்கட்டும் நடக்கட்டும்...என்று மனதுக்குள் சிரித்தவாறே..

மீனாட்சியின் அம்மா லேசுப்பட்டவள் இல்லை. மகளிடம் மட்டுமே கொஞ்சம் கருணை முகம்..புருஷனாகட்டும், பொதுஜனமாகட்டும்..வள்ளின்னா எல்லாருக்குமே நடுக்கம் தான். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு ன்னு கறாரா இருப்பாள்.

மகள் கிளம்பி போனபின், மடமடவென்று சேலை சுருக்கத்தை நீவி விட்டுக்கொண்டு, தெருமுனையில் இருக்கும் பொட்டிகடைக்கு போய் கடைக்காரனிடம் ஒரு பேப்பரில் எழுதியிருந்த நம்பரை காட்டி, இந்தாப்பா..இந்த நம்பருக்கு சுழட்டி குடு என்றாள்.

பையனுக்கு நம்பர் மனப்பாடம். கந்தன் சாருக்கு தானே? இந்தா.. என்று நம்பரை ஒத்தி ரிசீவரை வள்ளியிடம் கொடுத்தான்.

அலா..வ்? ? (ரிசீவரை மூடிக்கொண்டு பையனிடம் யாரு அவரு தானே? இல்லாங்காட்டி பேரைக் கேப்பாஹ) என்று கன் ஃ பார்ம் பண்ணிக்கொண்டு.,.அவருதாங்க, பேசுங்க என்றதும்,

“நானு வள்ளி. நீயி சீக்கிரம் வூட்டுக்கு வா..கொஞ்சம் பேசணும் என்றாள்.

கந்தன், ‘என்ன வள்ளி? “என்று கேட்பதற்குள் ரிசீவர் வைக்கப்பட்டிருந்து.

மாலை மகள் வந்த பிறகே வரும் கந்தன் அன்று மதியமே வந்துவிட்டிருந்தான்.
சாப்பாடு பரிமாறும்போதே “ரொம்ப நாளாச்சு இல்ல ? என்று ஆரம்பித்தாள். 

கந்தன் அதிசயமாய் அவள் முகம் நோக்க, ஹூஹூம்...முகம் கல் போல ஏதும் கண்டு பிடிக்க முடியாதவவாறு உணர்ச்சி துடைக்கப்பட்டு இருந்தது. தவிர வள்ளியும் தலை குனிந்து கேட்டதால் கந்தனால் ஒன்றும் ஊகிக்க முடியவில்லை.

“ஆளிழிக்கணும் யா ! “ என்றாள் பட்டென்று. கந்தன் துடித்துப்போய்,

“வள்ளி? வேணாம் வள்ளி! என்ன திடீர்ன்னு இப்ப என்றான். கெஞ்சி பயனில்லை என்று நன்கு தெரிந்தும்.

அதெல்லாம் வுட்டு வருஷக் கணக்காவுதே ? இன்ன செலவு இப்ப அவ்ளோக்கு? என்றான்.

ஆளிழுத்தல் என்றால் குற்றாலம் பகுதியில் ஒரு வட்டாரச்சொல். வருகிறவர்களை நோட்டம் விட்டுக்கொண்டு, அருவியில் குளிக்க வரும் பெருந்தனக்காரர்களின் வாரிசு யாரையாவது  சட்டென்று வெகுதூரம் நீரின் ஆழத்துக்கு இழுத்துச் சென்று உயிர் போகும்வரை கொஞ்சம் அழுத்தி பிடித்துக் கொண்டிருந்துவிட்டு பாறைகளின் இடையில் அந்த உடலை நகராது சொருகிவிட்டு போய்விட வேண்டியது. இதைத்தான் ஆளிழுத்தல் என்பார்கள்.

அவர்களில் யாரவது கூட வந்த ஒருவர் காணோம் என்று உணர்ந்து கதறி அலறும்போது தேடித்தருவதாக கூறி கணிசமான பணம் பேரம் பேசி..போய் “தேடி கொண்டு வருவாங்க.
அதைத்தான் செய்யச்சொன்னாள் வள்ளி.

“பொண்ணுக்கு யாரிட்டயோ  பெரிய பணக்கார சிநேகிதம் இருக்கும் போல இருக்குயா...அது மாதிரி எதாச்சும் நடந்தா நம்ம மானம் மருவாதி ல்லாம் காத்துல பூடும். இப்ப மீனாட்சிக்கு பார்த்திருக்கிற இடத்துக்கு சீதனம் வச்சு கரையேத்த பணம் தல போற அவசரமா தேவைப்படுது. நீ இன்னிக்கு அதை செஞ்சாவணும், ஆமா. என்றாள் தீர்மானமாக.

கந்தன் இருமனதாக எழுந்து வெளியே போனான். இருக்கட்டுமே..பொண்ணு சிநேகிதம் வச்சுருக்கிறது நல்ல புள்ளையா இருந்தா அப்படியே கண்ணாலம் பண்ணிகுடுத்தாத்தான் இன்ன? இன்னமோ இவளுக்குத்தான் மானம் மருவாதியா? பொண்ண விட பொண்ணு நல்லா வாளுறத விட மான மருவாதி பெரீசா பூடுச்சாக்கும்..ம்ம்..ஆனா...சொன்னாக்கேக்குற சாதியா இது? ராட்சச செம்மம்..வந்து வாக்கப்பட்டது லேர்ந்து இவ தான் , இவ சொன்னதுதான்..அப்பவே கொஞ்சம் கறாரா இருந்திருக்கலாம்..ஹ்ம்ம் எங்கே? ..நம்ம இரத்தம் அப்டி...!

அருவிக்கரைக்கு போய் ஒரு நோட்டம் விட்டான்...ஏயப்பா....இன்னா கூட்டம்...இன்னா  கூட்டம். மனசுக்குள் இருபது வரை எண்ணினான்...ஒரு மூச்சு இழுத்துவிட்டு நீரில் குதித்து கொஞ்ச தூரம் போய்..யாருக்கும் சந்தேகம் வராத அளவில் ஒரு பையனின் கையை சட்டென்று பிடித்து ஒரே இழு இழுத்து நீரின் அடியில் வாளை  போல பாய்ந்து அமுங்கினான். பையன் கொஞ்சம் திடகாத்திரன். துள்ளி திமிறி த்துடித்தான். ஆனாலும் பழகின கந்தனுக்கு இது ஒரு சிரமமா? வேலை முடித்து வேறு பக்கமாய் கரையேறி அந்த சம்பந்தப்பட்ட கூட்டத்தை கண்காணித்தவாறு ஒரு பாறையில் அமர்ந்து கொண்டான்.

ஒரு அரைமணி நேரம் ஏதும் நடக்கவில்லை. பிறகுதான் கசமுசா என்று ஆளாளுக்கு பதட்டத்துடன் பேசிக்கொண்டார்கள்..சில பையன்கள் நீரில் குதித்து போய் வந்தார்கள். கந்தன் சலனமேயில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு மணி நேரமாச்சு. அந்த கும்பலில் பதட்டம் அழுகையாய் உருவெடுத்தது. கந்தன் எழுந்து அவர்கள் கிட்டே போய் என்னங்க என்று விசாரித்தான். 

மகனை காணோம்ங்க..நல்லா நீச்சல் தெரிஞ்ச பையன் என்றது பையனின் அப்பா, அம்மாவோ பேசுகிற நிலையிலேயே இல்லை. போலீசுக்கு போகலாம் ன்னு யாரோ யோசனை சொன்னார்கள். கந்தன் கொஞ்சம் திடுக்கிட்டாலும் சுதாரித்துக்கொண்டு போலீசா? அவங்க வந்து கம்ப்ளெயின்ட் எழுதிக்கிட்டு போவாங்க அம்புடுதான்..இறங்கித்தேடுவாங்களாக்கும் என்றான் அலட்சியமாக. இன்ன வோணும் சொல்லுங்க..என்றான்.

பையன்தாம்ப்பா. என்றார் அப்பா.

இவ்ளோ தண்ணி ஓட்டத்துல..தேடுறது கஷ்டம்தான். கொஞ்சம் கணிசமா செலவாகும் என்றான்  தயங்காமல்.

அம்மாக்காரி ஆவேசம் வந்தது போல எழுந்து பையனின் அப்பாவிடமிருந்து கைப்பையை பிடுங்கி அப்படியே கந்தன் முன்னால் கொட்டி கவிழ்த்தாள்.. கட்டுக்கட்டாய் பணம். நூறும் ஆயிரமுமாய்..! தனது வளையல், சங்கிலி, மோதிரம் எல்லாம் கழற்றி கீழே வைத்தாள். கண்ணீருடன் கந்தனைப்பார்த்து கை கூப்பி இந்தாங்க..எல்லாத்தியும் எடுத்துக்கோங்க..இன்னுமும் வேணும்ன்னா ஊருக்கு போயி தாரோம்..பையனை கொண்டாங்க போதும் என்றாள்.. கந்தன் அவர்களை பார்த்துக்கொண்டே அதை அள்ளி எடுத்துக்கொண்டே கிளம்பினான்.

நீரில் குதித்து போய், தான்  "வைத்த" இடத்திலிருந்து  “அதை“ க்கொண்டு வந்தான். போய்விட்டான்.

வீடு போய் கைப்பையை மனைவியிடம் கொடுத்துவிட்டு குளித்து தலைமுழுகிவிட்டு படுக்க போய்விட்டான். சாப்பிடவில்லை. பையை த்திறந்து பார்த்த வள்ளி அசந்து போனாள். ஆனால் ஏதும் கேட்கவில்லை. அது மாதிரி தினத்தில் கந்தன் சாப்பிடுவதில்லை, வள்ளியும் வற்புறுத்துவதில்லை. பையை பத்திரப்படுத்தி விட்டு பெண்ணிடம் வந்தாள். அவளும் தூங்கிவிட்டிருந்தாள்.

காலை எழுந்ததும் முதல் வேலையாக மீனாட்சி அப்பாவை தேடிச்சென்றாள். உடனடியாக விஷயத்துக்கு வந்தாள்; சுற்றி வளைக்காமல்  “அப்பா நான் ஒரு டாக்டரை விரும்புறேன்ப்பா. ரொம்ப பணக்கார இடம் தான். ஆனால் நல்ல மனுஷங்கப்பா. நீ தான் இதை அம்மாட்ட சொல்லி எங்களை சேர்த்து வைக்கணும் ப்பா என்றாள். 

கந்தனும் இதை ஓரளவு எதிர்பார்த்திருந்ததால்
“சரிம்மா..ஆவட்டும்,சொல்லிப்பாக்கலாம் என்றான்.

மீனாட்சிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை ஓரளவு சுமாரான படிப்பும் செல்வமும் கூடிய இடம் ஆனால் நோயாளி. இதை தரகர் சொல்லவில்லை.  வள்ளிக்கு அரசால் புரசலாக தெரிய வர அங்கு போயி சாமியாடிவிட்டு வந்திருந்தாள்..இப்பதான் அவகிட்ட செல்வம் கொழிக்குதே..!

சரி..பொண்ணு இன்னாதான் சொல்றா அதையும் கேப்போம்..சரியா வந்தா அதையே  பாத்துக்கலாம் ன்னு மனசை மாற்றிக்காத்திருந்தாள். கந்தன் வந்து சேதி சொன்னதும், “அப்டியா யாராம் அவுக? கேளு, பாக்கலாம் ன்னு வள்ளி சொன்னதும் கந்தனுக்கு மட்டுமல்ல அந்த ஒற்றை அறையில் ஒரு தடுப்புக்கு பின்னால் இருந்த மீனாட்சிக்குமே தன் காதை நம்ப முடியவில்லை!
 
“அவுக கொஞ்சம் தள்ளி டவுனுல இருக்காங்களாம். பெரிய எடமாம்.என்றான் கந்தன். 
“சர்த்தான். யாரு இன்னா ன்னு வெசாரி என்றதும் மீனாட்சி முன் வந்து அம்மவைக் கட்டிக்கொண்டாள். அவுக டாக்டர் ம்ம்மா.. பேரு சங்கரன் என்றாள்.

மீனாட்சி சொன்ன விலாசம் எடுத்துக்கொண்டு கந்தனும் வள்ளியும்  கிளம்பினார்கள்.
போய் இறங்கி விலாசம் விசாரிச்சு வீடு வந்து (ஏயப்பா வீடா இது,,,நம்ம ஊரே இதுல அடங்கிரும் போல) கூர்க்கா மறித்ததும் சங்கரன் வீடு இதுங்களா? டாக்டர் வேல பாக்குறவக? என்றாள் வள்ளி. 

கூர்க்கா அவசரமாய் ..வாயைப்பொத்திகொண்டு..

"ஐயா அம்மா ஒங்களுக்கு புண்ணியமா போவும்..போயிருங்க...மவராசன் ராசா கணக்கா இருந்தாரே..போயி ரண்டு நாள் கூட ஆவல.. அருவிக்கு போன இடத்தில போயிச்சேர்ந்துட்டாக.. துக்க வீடு.. அம்மா வும் ஐயாவும் ஆரிட்டையும் பேசுற நெலம ல இல்ல..போயிருங்கையா என்றான்..!

கந்தன் திகிலடித்துப் போய் வள்ளியை பார்க்க....வள்ளி பேசாமல் நடையை கட்டினாள். கந்தன் பின்தொடர்ந்தான். மீனாட்சியிடம் எப்படி சொல்வது என்பதே இருவரின் எண்ணமாக இருந்தது. சொல்லாவிட்டாலும் தெரியாமல் போகாது.
வீட்டுக்கு வர நள்ளிரவாகி விட்டது..வீட்டின் முன் கும்பல்.. இதென்ன? வள்ளி பதறியடித்து போய் கூட்டத்தை விலக்கி பார்க்க, ஐயோ..மவளே...! மீனாட்சியின் தூக்கில் தொங்கிய கால்கள்.

வள்ளி மறைத்து வைத்திருந்த பையை மீனாட்சி பார்க்க நேர்ந்ததில்  சங்கரன் மீனாட்சிக்கு காட்டிய மோதிரம் இருந்தது. தனது தாயின் மோதிரம் போல உனக்கும் என்று சொல்லியிருந்தான்.  

தினமலர் வாரமலரில் வந்த ஒரு கதையின் எ ஃ பெக்ட் :)