Saturday 15 February 2014


                                         பிரபலமாகாத பெருமைத் திருத்தலம்!


எங்கள் ஊருக்கு (நெய்வேலி) அருகே ஒரு 15 Km.தூரத்தில்  வெங்கடாம்பேட்டை என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பாமா ருக்மணி ஸமேத ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் போயிருந்தோம். புனருத்தாரண வேலைகள் நடந்து கொண்டிருக்கின்ற படியால் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ன்னு வலம் வரவேண்டியிருந்தது. கோவிலின் பிரமாண்டம் வாயடைத்து போக வைக்கிறது. ஈ காக்கா இல்லை கோவிலில். பட்டரோ நாங்க வந்ததும் அவசர அர்ச்சனை செய்துவிட்டு  கிளம்புவதிலேயே குறியாய் இருந்தார். தல புராணம் கேட்டபோது மொனமொன ன்னு ஏதோ சொல்லிட்டு கிளம்பி விட்டார். 1464 ம் வருடத்திய கோவிலாம் இது. ஆனால் 108 திவ்ய க்ஷேத்ரத்தில் இது சேர்த்தியில்லையாம். திருச்சியை ஆண்ட இராஜாக்கள் கட்டியதாம். 

அந்த ஊரில் இங்கொன்றும் அங்கொன்றுமாக மொத்தம் இருபது வீடுகள் இருந்தால் அதிகம். மண்சாலை. 

திருநீர்மலை திருத்தலம் போல (மலை கிடையாது) இங்கும் நின்ற, அமர்ந்த கிடந்த திருக்கோலங்களில் பகவான் திவ்ய தரிசனம். 

முதலில் ஸ்ரீ செங்கமலவல்லித்தாயார்.  கைகளில் தாமரை மொக்குடனும் கண்களில் அதீத தாய்மை கலந்த சோபையுடனும் சிறப்பு அலங்காரம் ஏதுமின்றியே திவ்ய அலங்கார ஸ்வரூபியாக காணக்கிடைக்கிறாள்!

அடுத்து, நின்ற திருக்கோலத்தில் கையில் புல்லாங்குழலுடன் கண்மூடி மெய்மறந்து இசையில் லயித்த திருக்கோலம் காணக் காண...ஆஹா..நம் கண்களை அந்த திவ்ய ரூபத்திலிருந்து பிரித்து எடுக்கவே முடியவில்லை. அந்த கண் மூடி இசையில் லயிக்கும் “பாவம் இரசிக்க ஜென்மம் போதாது. குழலோசை கூட கேட்பது போல ஒரு பிரமை ! சிலை வடித்தவன் மகா ஞானியாகத்தான் இருக்கணும். இவரை தரிசிப்பது ஸ்ரீ உப்பிலியப்பனை தரிசிப்பதற்கு ஈடாம்.

அதற்கடுத்து அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீ வரதராஜபெருமாள். பிரதிஷ்டை ஆகக் காத்திருக்கிறார்.

அடுத்த அதிசயமோ....சொல்லி மாளாது...!மஹா பிரம்மாண்டமாய் கிடந்த திருக்கோலத்தில் ஸ்ரீ அனந்த சயன இராமர்! இவரைத் தரிசிப்பது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கனை தரிசிப்பதற்கு சமானமாம். பதினைந்து  அடி நீளமும் நான்கடி  அகலமுமாய் வலது கையை வலது காதுக்கு அண்டக்கொடுத்து இடதுகையை ராயஸமாய் உடலின் இடது பக்கவாட்டில் கிடத்தி அறிதுயிலும் அந்த திவ்ய மங்கள அழகை நெற்றி, கன்னம், உதடு, மூடின சாந்த ஸ்வரூப கண்கள் என்று திகட்டத்திகட்ட அனுபவிக்கலாம். முகம் முழுவதிலும் ஜொலிக்கும் அந்த பேரமைதியும் சாந்தமும் அழகும் மார்பில் ஸ்ரீ மகா லக்ஷ்மியுடன் அப்படியே மனதில் மங்காத ஓவியமாய் இடம் பிடிக்கும் ஒரு பளிச் ஷாட். ஆயுள் முழுக்க மறக்க முடியாத அழகு.

தன்னை எப்போது உலகறியச்செய்ய வேணுமென்பதை அந்த வேணுகோபாலன்தான்  அறிவான் !

இரவு ஏழு மணியானாலும் இன்னும் ஆரஞ்சு வண்ணம் மாறாத 
அழகு நிலா கூடவே வந்தது வீடு வரை !
.





3 comments:

  1. மிக அற்புதமான கோவில் ஒரு முறைக்கு இரண்டு முறை போய்வந்து இருக்கேன் ....
    விஜய நகரபேரரசர் திருமலை நாயக்கர் கட்டியதாகவும் சொல்லபபடுகிறதே ?
    எது எப்படியோ தென்னிந்தியாவில் திருவனந்தபுரம் குருவாயூரில் இருபதுபோன்ற
    சிலை இங்கே இருக்கிறது . என்பதுதான் எல்லோரது கருத்தும் . நல்ல செய்தி
    இருபினும் கோவிலுக்கு வெளியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தை பார்த்தீர்களா ?
    மிக அற்புதமானது ..... நல்ல பகிர்வு

    ReplyDelete
  2. Beautiful narration... பக்திமணம் கமழ்ந்தது...அருமை..

    ReplyDelete
  3. Beautiful narration.. பக்திமணம் கமழ்ந்தது.. அருமை

    ReplyDelete