Thursday, 3 April 2014

எண்ணச்சிலந்தி

மேலே தொங்கிய கால்கள்........

தபதபவென ஒரு ஏழெட்டு பேர் அந்த போலீஸ் ஜீப் லேர்ந்து இறங்கி வர
கூட்டம் கொஞ்சம் சலசலப்பு அடங்கி கலைந்தது.

யாருப்பா ஃ போன் பண்ணது ?

நாந்தாங்க...

இரும்மா...உன்ன விசாரிக்கணும். அப்டி ஓரமா ஒக்காரு.

நகருங்க...நகருங்க..பாத்து இறக்குப்பா...

த்சோ த்சோ...ரொம்ப சின்ன வயசுதான் போல..

ஆமாங்கிறேன் ..இவளும் தம்பியும் ரெண்டே பேருதான்.
தம்பிக்கு கலியாணம் ஆகிடுச்சு. வேற இடத்தில குடி வச்சாலும்
வரப்போக இருப்பாங்க.

என்னவாம்..

யாருக்கு தெரியும்..கிரகச்சாரம்..என்ன கண்றாவியோ...?

போங்கப்பா எல்லாரும்.. இல்லாட்டா ..யோவ்..த்ரீ நாட் டூ..இங்கன வா.. இங்கிட்டு இருக்குவ பேரெல்லாம் எளுதிக்க. டேசனுக்கு கூப்ப்டா வந்துரணும் ஆமாங்..
சட்டென்று ஒரு ஈ காக்கா இல்லாமல் கப்சிப்..


   *****

ஒரு மதிய நேரம்...கொஞ்சம் வெக்கையாக இருந்தது. கசகசப்பு மற்றும் எரிச்சலுமாய்   கலைவாணி  சிஸ்டத்திலிருந்து கொஞ்சம் எழுந்து வராண்டாவில் நடக்க ஆரம்பித்தாள் . கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாய் இருந்தது..எதிரே இவள் தோழியும் வர இருவருமாய் கேண்டீன் பக்கம் நடந்து மர நிழலில் உட்கார்ந்தார்கள். அவளும் ஏதும் பேசவில்லை.
"என்ன யோசனைலாம் ரொம்ப பலமா இருக்கு? என்று கலைவாணியே பேச்சை ஆரம்பித்தாள்.
ப்ச்..ஒண்ணும்  இல்லப்பா ..அன்னிக்கு சொன்னே  ல அதை பத்தி தான் .."

கலைவாணி திடுக்கிட்டு போனாள்..

அது நினைவுக்கு வந்ததால் தான் அங்கே இருந்து அந்த நினைவிலிருந்தே தப்பிப்பது போல எழுந்து வந்தாள்...

பாவி.. இவளும் அதையே வா ஆரம்பிக்கணும் ன்னு மனத்தாங்கலாய் இருந்தது.

மீரா..ப்ளீஸ்..ஒனக்கு புண்ணியமா போகும். அதை ஏண்டி இப்ப ? என்றாள்.

"அதேப்ட்ரீ? நீ சொன்ன மாதிரியே...? "

ஐயோ மீரா..வேணாம். விடு. சரி நான் கிளம்பறேன்..வேலை கெடக்கு தலைக்கு மேல..அப்புறம் பார்க்கலாம்"

இல்ல இல்ல..கலை..இரு இரு..எனக்கு அங்க மீட்டிங் நடந்திட்டு இருக்கு.
நடுல போய் கலந்துகிட்டா சரி வராது...நீயும் கிளம்பிடாதே"

கொஞ்சம் மௌனம் அமர்ந்திருந்தது இருவருக்கும்  நடுவில் .
வேற எப்படி  பேச்சை தொடங்குவது என்று இருவருக்குமே பிடிபடவில்லை.

****

அதே அலுவலகத்தில் கூட பணிபுரியும் மணி என்கிற மணிவண்ணன் கொஞ்சம் சோம்பேறி, இருந்தாலும் நல்ல மாதிரி.
தானுண்டு தன வேலையுண்டு என்று இருப்பவன்.

கலைடாஸ்கோப் போல சட்டென்று காட்சி  மாறியது..

ஏதோ மணிவண்ணன் அழுவது போலவும் வீட்டில் ஏதோ கும்பல் போலவும் மசமசவென்று ஒரு காட்சி தோன்றியது கலைவாணிக்கு.

ஒருநாள் கலைவாணி அவன் இடத்திற்கு சென்று...
"மணி..நாளைக்கு கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க " என்றாள் .
மணிக்கு தலை கால் எதுவும் புரியவில்லை.

"கலை..! ஹி ஹி என்ன சொல்றே? "என்றான்.

"இல்லை..எனக்கும் சரியா சொல்ல தெரியலை. கொஞ்சம் பார்த்து நடந்துக்குங்க..நாளைக்கு "என்றாள்.

மறுநாள் மணி அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவந்தான் கலைவாணியிடம்.
அக்கா..என்னமோ சொன்னீங்களே..நான்தான் மரமண்டையாச்சே..கொஞ்சம் தெளிவா சொல்லிருக்க கூடாதா..ஐயோ..ன்னு தலையில் அடித்துகொண்டு அழுதான்.

ஆ ஃ பீஸ் மொத்தம் திரும்பி பார்த்தது.
பின் டிராப் சைலன்ஸ்...

"என்னாச்சு மணி?"

"என்னாவணும்/? என் கருவேப்பிலை கொழுந்து மாதிரி இருந்த ஒரே  பொண்ணு வேலியோரமா வெள்ளாண்டு கிட்டிருந்தா. பக்கத்தூட்ல தூரக்க மரம் வெட்டிகிட்டு இருந்திருக்காங்க.. அதில ஒரு கிளை முறிஞ்சு என் புள்ள கை ல விழுந்திட்டு .."

ஆ ஃ பீஸ் மொத்தம் கலைவாணியை ஒரு சூனியக்காரி மாதிரி பார்த்தது.

***

இன்னொரு முறை
வேலைக்காரி தாயம்மாவிடம்
"குழந்தைக்கு என்ன? " என்று விசாரிக்க, தாயம்மா கண்ணு ரெண்டும்  வெளியே தெறிச்சு விழுந்துவிடுவது போல கலைவாணியை பார்த்தாள்..

ஆத்தீ....பொண்ணு எங்கிட்டோ வடக்கால இருக்கு. மருமவங்காரன் பட்டாளத்லே கீறான்...நேத்து தான் சேதி வந்துச்சு. மகமாயி நீ எப்படியாத்தா கேட்டே ? என்றாள்.

"என்ன கேட்டேன்?"

கொளந்தை க்கு என்னான்னு கேட்டியே? என்றாள்.

"ஆமா..ஏதோ நெருப்பு..காயம் .."

தாயம்மா படபடவென்று கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

" ஆத்தீ...நீ அந்த மகமாயி யே தான்..எப்டி தெரிஞ்சுது அதுங்காட்டியும் ?"

அதுவும் ஏதோ மனக்கண்ணில் தெரிந்த  காட்சிதான். தாயம்மா ஒரு குழந்தையை தோளில் சார்த்திக்கொண்டு வேகமாக போவது போலவும், ஒரே கரும்புகையாகவும் தெரிந்தது..

கலைவாணிக்கு தலை வலித்தது. நெற்றிப்பொட்டு விண் விண்ணென்று தெறித்தது.

***

ஐயோ...இது என்ன ESP மாதிரி ஏதோவோ...?
இரண்டுமுறை ஆகிவிட்டது.
டாக்டரை பார்க்கணுமோ?
யாரை பார்ப்பது இதற்கு.?
சைக்காலஜிஸ்ட்டை பார்க்கணுமோ..
கடவுளே..அதுக்கு வேற என்னல்லாம் பேச்சு கிளம்புமோ..?

தம்பி குடும்பத்துடன் கொஞ்சம் எங்கேயாவது வெளியூர் போய்வரலாம் என்று தோன்றியது..

பக்கத்தில் இருக்கிற ஊருக்கு சென்று வந்தார்கள். அழகான  பெருமாள் கோவில் இருந்தது. 108 திவ்ய தேசத்தில் இடம்பெறாவிட்டாலும் நல்லவிசாலமான நேர்த்தியான கோவில். கட்டுமானம் நூதனமாய் இருந்தது. கொஞ்சம் கேரளம், கொஞ்சம் கன்னடம் கலந்த கட்டுமானம். ஸ்ரீநிவாச பெருமாள் , கமலவல்லித்தாயார் . பிரகாரம் சுற்றிவிட்டு வந்து அமர்ந்தார்கள்.

தம்பியிடம் சொன்னாள்..இந்த மாதிரி ஏதோ தோணுது. சொன்னா நடக்குது. சொல்லவும் பயமா இருக்கு. சொல்லாமலும் இருக்க முடியல டா என்றாள்

முதல்ல அவன் பயங்கர ஜோக் போல சிரித்தான்...

நல்ல பிசினெஸ் பண்ணலாம் போலேயே...? போர்டு ஒண்ணு மாட்டிறலாம்.
பயலுக வந்து வுளுவானுங்க என்றான்,   நேர இருக்கும் பயங்கரம் தெரியாமல்.

"விளையாடதடா...தலைவலி மண் டையப் பொளக்குது அந்த சமயத்தில, எதாச்சும் டாக்டர்ட்ட கூட்டிட்டு போடா ன்னா? நீ வேற ..ஹ்ம்ம். "

சரி..பாண்டிச்சேரில என் ஃ ப்ரென்ட் இருக்கான். போய் பார்த்துக்கலாம்.
நான் ஃ போன் பண்ணி அப்பாயின்மென்ட் வாங்கறேன். டோன்ட் வொர்ரி என்றான் .

அப்பாடா..என்று இருந்தது கலைவாணிக்கு.

காரில் திரும்பி வரும்போது கொஞ்சம் தெம்பாக உணர்ந்தாள்.

இரவு படுக்கும் முன் கதவு, சுவிட்ச் எல்லாம் சரிபார்த்து விட்டு படுக்க வரும்போது ...வாசல் கதவு தட்டுவது போல ...

கொஞ்சம் நிதானித்தாள்.. இது பிரமையா? அந்த மாதிரி காட்சியா? நிஜமா ன்னு கொஞ்சம் தடுமாறியது .

கதவை  திறந்து பார்த்து ஒருகணம் ஐயோ ன்னு  அலறி விட்டாள். தம்பிக்கு இடது கையில் உள்ளங்கை முழுதும் கட்டு. ஒரு கணம்தான். அவளுக்கு புரிந்துவிட்டது.. யாருமே இல்லை அங்கே.

 ஓடு ...

ஓடு ...

உடனே

உடனே

உடனே...

தம்பிக்கு ஃ போன் அடித்து....

ரிங் போய்க்கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. எடுடா எடு. எடேன்..ப்ளீஸ். எடேண்டா....

காலையில் அவனுக்கு ஃ பர்ஸ்ட் ஷிஃ ப்ட் . காலை ஐந்தரை மணிக்கு கார்ட் பன்ச்-இன் பண்ணுவான். அதற்குள் சொல்லியே ஆகணும்.. கவனமா இருடா..கைல ஏதோ கட்டு மாதிரி...ன்னு சொல்லி ..

ஹூஹூம்...யாரும்
ஃ போன் எடுக்கவில்லை.

இவளுக்கு மனம் துடித்தது.  தூங்காமல் இரவு முழுக்க தனியே படுக்கையில் உட்கார்ந்தும், நடந்தும்....பொழுதை கழித்தாள்..இடையிடையே ஃ போன் அடித்து ...பதிலில்லாமல் போகவே...
சரி போய் பார்த்து விடலாம், என்று கிளம்பும்போது

மறுபடி வாசற்கதவு  தட்டிய சத்தம்..

ஹூஹூம். நோ. திறக்க வேண்டாம்...இது யாரும் இல்லை.பிரமைதான்.
மறுபடி கொஞ்சம் சத்தமாக தட்டப்பட்டது கதவு...

திறக்கலாமா..சரி ஜன்னல் வழியே பார்த்துட்டு திறக்கலாம் .

ஜன்னல் வழியே பார்த்த காட்சி அவளை அடியோடு நிலைகுலைய வைத்தது...

கையில் ஏதோ கட்டுடன் வருவான் என்று நினைத்த தம்பி
ஒரு  கையே இல்லாமல் ...

ஒரே ஓட்டமாய் ஓடிச்சென்று ஃ பேனில் தூக்கில் தொங்கிவிட்டாள்!

அதுதான் நீங்கள் முதலில்  மேலே படித்த காட்சி.....

தம்பி டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் டுடன் வந்து பார்த்து
 இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக்கொண்டு கதறினான்...

அவரசப்பட்டுட்டியே கலை....ஐயோ....! அவரசப்பட்டுட்டியே....