Sunday 8 June 2014


கூண்டுக்கிளி
==============

"என்ன என்ன ஆசைகளோ.....
இன்ப விழி பார்வையிலே....
சொல்லிச்சொல்லி முடித்துவிட்டேன்..
சொன்ன கதை புரியவில்லை...."

முரசு சானலில் ஒலித்த பாடலுடன் கூடவே பாடியபடி கிச்சனில் மும்முரமாய் இருந்தாள் மீரா. குக்கரை த்திறந்து வேக வைத்த பருப்பை கடைந்து வைத்துவிட்டு காய் நறுக்கிக்கொண்டிருந்தாள்..
பாடல் நின்று விட்டது.
என்ன இது? சத்தமே இல்லை ?
என்று வெளியே வந்து பார்த்தபோது
அப்பா ரிமோட்டை,  டிவியை அனைத்துவிட்டு , அலமாரியில் விட்டு எறிந்துவிட்டு வாசலுக்கு போய்க்கொண்டிருந்தார்.

சரிதான்...இன்னிக்கு சாப்பாடு அவ்ளோதான்...

குழம்பா ரசமா பொரியலா கூட்டா என்று குழம்பிக்கொண்டிருந்தவள்
 ஒரு ரசம் மட்டும் வைத்து தாளித்து விட்டு  அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரங்களை சிங்க்கில் போட்டு அடுப்படி மேடை துடைத்து,
காலை   டி ஃ பனுக்கு செய்திருந்த தோசை , சட்னி, எடுத்து வைத்து
 மிளகாய் பொடி எண்ணெய் விட்டு குழைத்து வைத்து,
செம்பில் நீரும் டம்பளரும்  எடுத்து வைத்து விட்டு
ஹப்பாடா என்று வியர்வை பொங்க ஹாலுக்கு வந்தாள்..
ஃ பேனை போட்டு விட்டு வாசல் பக்கம் பார்த்து குரல் கொடுத்தாள்.

"அப்பா ? சாப்பிடலாம் வாப்பா..!"

சத்தம் இல்லை. மீண்டும் "அப்பா? "

ஹூஹூம்.. போவதா வேண்டாமா? காலையிலேயே வாக்குவாதமா?
ஆ ஃ பீசுக்கு நேரமாயிடுமே...என்ற யோசனையோடு வாசலில் வந்து பார்த்தால் அப்பா வெளியே போயிருந்தார்!

மனதில் பெருங்கோபம் தீயாய் பொங்கி எழுந்தது...
ஹ்ம்ம் .  இந்த ஆண்கள்!
பாதி பேச்சில் அடிக்க வேண்டியது,  இல்லாட்டா சட்டையே பண்ணாம சட்டைய மாட்டிக்கிட்டு வெளியே போயிட வேண்டியது. ஒருநாளாவது ஆரோக்கியமா விவாதம் பண்ணதுண்டா? அட..வாதமே கூடாது. இதில எங்க ஆரோக்கிய விவாதம். ?

ஒரு பத்து நிமிடம் அப்படியே வெறுமையாய் உட்கார்ந்திருந்தாள்.
பத்து வருஷமாய் வேலைக்கு போகிறாள்.
அப்பா ரிடையர் ஆகி ஆறு வருஷம் இருக்கும்.
இன்னும் கூட அம்மா எதிர்த்து பேச மாட்டாள்.
ஆனால் அவள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமே அலாதி.
பாத்திரங்களின்  தனி ஆவர்த்தனம் நடக்கும்..முணுமுணுவென்ற இசையோடு....அப்பாவுக்கு அது எரிச்சலாக இருந்தாலும்...
அதை அப்போது வெளிப்படுத்த மாட்டார்.
வேற ஒரு சந்தர்ப்பத்தில் காட்டுவார்.

முப்பத்தி ஐந்து வயதுக்கு அவளை இன்னமும்
"கதை  படிக்காதே"
" என்ன எப்ப பாத்தாலும் டிவியும் பாட்டும்?
"பதிலுக்கு பதில் வாயாடாதே, எனக்கு பிடிக்காது"

"நீ கேட்டதுக்குத்தானே பதில் சொன்னேன்? "ன்னு சொன்னா
"பதில் ல்லாம் சொல்ல வேண்டாம் , சரின்னு கேட்டுக்க. அது போதும்.."

"ஒருநாளைப்போல சொல்லணுமா..உப்பு போட்டுத்தானே சாப்பிடுற.?
அதென்ன காலை ல எழுந்த உடனே டீ வி ?
எழுந்த உடனே இல்லப்பா ன்னு கூட  பதில் சொல்ல முடியாது அங்கே.

இன்னிக்கு என்ன ராமாயணமோ? கடவுளே...

வண்டி சத்தம் கேட்டது..அப்பா!

உள்ளே  வருவார்,
 பதில் சொல்றதா, மன்னிப்பு (?!) கேக்கிறதா ன்னு
யோசித்தபடியே நின்று கொண்டிருந்தாள் .
உள்ளே வராமல் வாசலில் பெஞ்சியில் படுத்து கொண்டார்.
மீரா வெளியே வந்து  " சாப்பிட்டலாம்ப்பா.. வாயேன்.."

பதிலில்லை. மீண்டும் " அப்பா?" என்றாள்.

"உங்கையால சாப்பிடறதுக்கு ........யை சாப்பிடலாம்.
ஒரு மட்டு மரியாதை கிடையாது. சம்பாதிக்கிறோம் ன்னு திமிரு.
போட்டதை தின்னுட்டு விழுந்து கிடக்கிறவன் ன்னு ஒரு இளக்காரம்."

"ஐயோ..அப்பா..என்னப்பா இதெல்லாம்..நான் அப்டி இல்லை ன்னு உனக்கே தெரியும். சும்மா என்னை காயப்படுத்தணும் ன்னு இதை எல்லாம் சொல்ற."

"போ பேசாம...தத்துவம் பேச வந்துட்டா.. !
எல்லாம் எனக்கு தெரியும் யார் யார் எப்டி எப்டின்னு ."

முன்பெல்லாம் நின்று மன்றாடுவாள். காலில் விழுந்து மன்னிச்சுக்கப்பா..இனிமே உனக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன்ப்பா...என்று அழுதிருக்கிறாள்..அதெல்லாம்  ஒரு காலம்.
இப்ப பதிலேதும் கூறாமல் வந்து, ட்ரெஸ் மாற்றி ஆ ஃ பீஸ்  கிளம்பினாள்.

லோக்கல் ல எங்க போனாலும் அரைமணிக்குள் வீடு திரும்பியாகணும்.
வாலண்டியரிங் போனா அப்படி வர முடியாது.
"ஆமா நீ இல்லாட்டா அங்க எல்லாம் அப்டியே நின்னுடுமா? "என்பார்.
அதனாலேயே இப்போதெல்லாம் எங்கும் போவதில்லை.
ஆ ஃ பீஸ் , வீடு, ஆஸ்பிட்டல், அன்றாட தேவைகளுக்கு கடைத்தெரு
என்று அவள் உலகம் சுருங்கியது.
இரவு உணவு சரியா எட்டு மணிக்கு இருக்கணும்.
கொஞ்சம் முன்ன பின்ன ஆயிட்டா அவ்ளோதான்
 "எனக்கு சாப்பாட்டு வேண்டாம். "

கூட இருப்பவர்கள் கேட்பதுண்டு "ஏன் அவரே எடுத்து போட்டு சாப்ட மாட்டாரா?"
இதை ஒருநாள் அப்பா நல்ல மூடில் இருக்கிறப்ப,
"வர கொஞ்சம் லேட்டானாலும் நீ போட்டு சாப்பிட்டுக்கிறியாப்பா ? என்று கேட்டதில் வெடித்தது பூகம்பம்.
"ஏன் ஒரு ஆம்பிளைக்கு சோறு போடக்கூட முடியாதபடிக்கு அப்படி என்ன வேலை வெட்டி முறிக்கிறீங்க ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா ? "என்றார். கையில் வைத்திருந்த தண்ணீர் செம்பு விட்டெறியப்பட்டது.
எழுந்து அடிக்கவே வந்தார்.

இதெல்லாம் ஏதோ கற்பனை கலந்து கட்டி அடிக்கிற விஷயமில்லை.
இன்றும் தொடர்வது. இப்போ நெட்டில் உட்காருவதால் இன்னிக்கு
"ஆன்னா ஊன்னா அங்க போய் உக்காராதே..எனக்கு பிடிக்கலை.
 வெறுப்பா இருக்கு. என்றார் மதியம் சாப்பிடும்போது.

ஆமா..உனக்கு வெறுத்தா என்ன விரும்பினா எனக்கென்ன?
நான் என்ன இன்னும் சின்னக்குழந்தையா?
இதெல்லாம் ரொம்ப ஓவர்.
எல்லா வேலையும் முடிச்சிட்டுத்தானே உக்கார்றேன்.
வீடு பளிங்கு போல இருக்கு, தூசு தும்பு ஒட்டடை இல்லாம.
வேலைக்காரி கூட கிடையாது.
பாத்திரம் தேய்ப்பது முதல் கடைதெரு போய்வருகிற வரை
எல்லாம்தான் செய்யறேன்.
வேலைக்கும் போய்க்கிட்டு......

என்று மனதுக்குள் குமுறினாள் ..வெளியே சொல்லிட முடியுமா?
இந்த வயசுக்கும், சாப்பாடு வேண்டாம் ன்னு போய் உட்கார்ந்துப்பார்.

ஒரு டம்ப்ளர் ரசமோ குழம்போ வைக்கிறது எவ்ளோ பெரிய பிரம்ம வித்தை ன்னு வச்சு பாத்தவங்களுக்குத்தான் தெரியும். ஆயிரம் பேருக்கு அள்ளிப்போட்டு செய்து இறக்கிடலாம்.
கொஞ்சூண்டு செய்வது என்பது படு கஷ்டம்.
ஆளுக்கு ஒரு கரண்டி சாப்பிட ...!
பொரியலோ ஒரு ஸ்பூன் அளவு போட்டுக்க செஞ்சாகணும்.
அதிகம் செய்து அடுத்த நாளைக்கு வைத்தால் சாப்பிட மாட்டார்.

அன்று  ஆ ஃ பீஸ் லிருந்து கிளம்ப கொஞ்சம் லேட்டாகி விட்டது.
இருந்தாலும் அப்பாக்கு தகவல் சொல்லிவிட்டதால் கொஞ்சம் பதட்டமின்றி இருக்க முடிந்தது . அப்பாவை பார்க்க என்று  யாரோ அவரோட பால்ய சிநேகிதர் வந்திருப்பதால் சரிம்மா என்று சொன்னதோடு நிறுத்தி விட்டார்.

மெல்ல சத்தமின்றி வண்டியை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே போகாமல் தயங்கி நின்றாள்..
நம்மை பற்றி ஏதும் குறை சொல்லி குமுறிக் கொண்டு இருப்பாரோ?

அப்பா சொல்லிக்கிட்டு இருந்தார்..எனக்கும் தெரியும்ப்பா..
அவ வந்து தான் எனக்கு சாப்பாடு போடணும் ன்னு வச்சிருக்கிறதால தான் அவளும் என்னோட உட்கார்ந்து  நேரா நேரத்துக்கு சாப்பிடுறா. இல்லாட்டா அவ அம்மாவாட்டம் உழைச்சு ஓடா தேஞ்சு கரைஞ்சுருப்பா.
இன்னும் அவ குழந்தை தான் எனக்கு . அவ நல்லதுக்குதான் இதெல்லாம்.
சரி வேணு...நீ கிளம்பு. அவ வர நேரமாச்சு.. !

அவள் வாயடைத்து போனாள்..என்ன மாதிரியான அன்பு இது !

இருந்தாலும் கொஞ்சம் மனசுக்குள் நெருடியது..இல்லையில்லை
இது ஊருக்கு போடுற வேஷமா கூட இருக்கலாம்.
எப்படி இருந்தால் என்ன..
சிறகெல்லாம் வெட்டப்பட்ட கூண்டுக்கிளி.
இனி பறக்கவும் உத்தேசமில்லை.

உள்ளே வந்து அப்பாக்கு டீ போட்டு எடுத்து போனாள்.! அடுத்தடுத்த வேலைகள் அணிவகுத்து நின்றன....
















1 comment:

  1. ஊ....ஹூம்! அந்த அப்பா சாக்கு சொல்றார்!

    ReplyDelete