Wednesday, 2 July 2014

*சொர்ணாக்கா விசாலம்

·           *
                                     

அவள் விசாலம். பேருக்கேற்ற படி நல்ல விசாலமான ஓங்குதாங்கான உடல்வாகு தான். பத்து வீடுகளில் வேலை பார்க்கிறாள். அவளின் நேரந்தவறாமை தான் அவளது கறார் குணத்தை கொஞ்சம் சகித்துக்கொள்ள வைத்தது. எல்லார் வீடுகளிலும் பாத்திரம் துலக்குவது மட்டுமே அவள் வேலை.  

துலக்கி முடித்து விட்டு ஒரே ஒருஐந்து நிமிடம்  உட்கார்ந்து சாவகாசமாக என்னவோ உலகத்திலே அது ஒண்ணே பிரதான வேலை மாதிரி வெகு கவனமா சுவாரசியமாக வெற்றிலை எடுத்து, அதை பிரியமாக தடவி, கொஞ்சம் கையில் வைத்து அழகு பார்த்து, நுனி கிள்ளி, திருப்பி, காம்பு கிள்ளி, நடு நரம்பை நோகாமல் உருவி, சுண்ணாம்பு தடவி, அந்த சுண்ணாம்பை கட்டை விரலால் நீவு நீவி கொஞ்சம் பரப்புவது போல வெற்றிலை முழுதும் ஒரு தேய் தேய்த்து மேலிரண்டு ஓரங்களை மடக்கி நடு பாகத்தை கொஞ்சம் கிட்ட சேர்த்து அடிப்பக்கம் உள்நோக்கி மடித்து வாயில் அதக்கிக் கொள்ளும் அழகே தனி. அவள் விரல்கள் வெற்றிலை நீவ  மட்டுமல்ல, வர்மக்கலையும் அறிந்தவை என்பது யாரும் அறியாதது.

அப்படி அதக்கி கொள்ளும்போது கண்கள் இரண்டும் கீழ்பார்வையாய் ஏதோ யோசைனையில் இருந்தால் நிச்சயமாக அன்னிக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு ன்னு நம்பலாம். அல்லாமல் சுற்றுபுறம் நோக்கி கண் அலைந்தது என்றால் அந்த வீட்டை விட்டு விடுவாள், அங்கே வேலை செய்ய பிடிக்கவில்லை  என்று அறியலாம் .

அவள்தீர்த்து வைத்த பஞ்சாயத்துகளில் பல, அதிரடியாய் கொலை கூட அடக்கம். ஆனால் இன்னும் தடயம் கூட வைக்காமல் சிக்காமல் இருப்பதிலேயே  அவளின்  திறமை இந்நேரம் உங்களுக்குத் தெரிய வந்திருக்கலாம். 

துலாக்கோல் போல கிஞ்சித்தும் பிசகாத நேர்மையான நியாயத்தீர்ப்பாகத்தான் இருக்கும் அவள் பஞ்சாயத்து. 
ஆனால் இன்னொரு பக்க அநியாய வாதிகளுக்கு அப்படி தோன்றாதில்லையா? அதனாலேயே அவளுக்கு விரோதிகளும் அதிகம். அது பற்றி அவள் அலட்டிகொள்வதில்லை.   என்னிக்கிருந்தாலும் சாவுறது தான். அது என்னிக்கா இருந்தா என்ன? எப்படியா இருந்தா என்ன  ன்னு போயிக்கிட்டே இருப்பா.   

இன்னிக்கு அவள் வெற்றிலை போடும்போது கீழ்பார்வையாய் யோசனையாய் இருப்பது போல தெரிந்தது. 
ஆஹா...ஏதும் பஞ்சாயத்தோ? அப்படி எல்லாம் என்ன ஏதுன்னு  அவள் வாயை பிடுங்கிட முடியாது லேசில்.
கட்.
அடுத்த ஷாட்
.பெரிய தோட்டகாரவுக வீடு ன்னா சுத்து வட்டாரத்திலே எல்லாருக்கும் தெரியும் அது மாங்கொல்லை ஐயா வீடுதான் ன்னு . பெருந்தனக்காரங்க. ரெண்டு பெண்ணும், ஒரு பையனுமாய் . பொண்ணுங்களை கிட்டத்தில தான் கொடுத்திருந்தார். பையனுக்கு பொண்ணு  கொடுக்க நான் நீயின்னு வந்தாலும் இன்னும் ஒன்றும் தகையவில்லை.
பையனும் ஒண்ணும் பிடி கொடுத்து பேசவில்லை. ஏதும் காதல் கத்திரிக்கா ன்னு கசமுசாவா இருக்குமோ ன்னுட்டு விசாலத்தை விட்டு  விசாரிக்கசொல்லி இருந்தார்.

விசாலம் யாரையும் ஆள் வைத்து அறிவதில்லை. தானே நேரடியாய் களம் இறங்குவது தான் அவள் ஸ்டைல். மாங்கொல்லை ஐயா வீட்டின் பையன் சாமித்துரையின் போக்குவரத்துகளை கவனித்து வந்தவள் அன்று  அந்நேரத்துக்கு ஆற்றங்கரையில் இருப்பான் என்ற அனுமானத்துடன் அங்கே வந்து காத்திருந்தாள். புல்லட் ஓசை அவன் வரவை அறிவித்தது...வந்து இறங்கினவன்...என்ன ஆயா இங்க இருக்கே...சோலியேல்லாம் முடிஞ்சிருச்சா என்று கேட்டவண்ணம் காலை த் தூக்கி இறங்கி வண்டியை சைட் ஸ்டேன்ட் போட்டு நிறுத்திவிட்டு அருகில் வந்தான். 

விசாலம் ஒரு வாயகன்ற சிரிப்பை பதிலாக்கினாள். சாமிதுரைக்கு தெரியாதா..அவனும் பதிலுக்கு ஒரு சிரிப்பை கொடுத்து அங்க அவளருகில் அமர்ந்தான். 
வாய்யா.. வெத்தில பாக்கு வோணுமா
வேண்ணா ஆயா .
என்னா சங்கதி....ஒன்ர அப்பங்காரன் கண்ணால பேச்சு எடுத்தா சிக்கமாட்டேங்குறியாமே? இன்னா எதுனா சமாச்சாரமா?
க்கும்...அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆயா..இருந்தா நான் சொன்ன எங்கப்பன் என்ன வேணான்னா சொல்லிடுவாரு, இல்ல நாந்தான் அப்டியே வுட்ருவ்னா ?
பின்னா என்ன? காலா காலத்துல கட்டிக்குனு ரெண்டு புள்ளகுட்டிய பெத்தமா வேலைய பாத்தமான்னு இல்லாம ?

அவனுக்கு கொஞ்சம் யோசனையா இருந்துது...எப்படி சொல்லலாம்...சொல்லலாமா வேணாமான்னு..
சரி...உம்மவ படிப்ப முடிச்சிட்டா ள்ள? என்ன பண்ண போறா மேக்கொண்டு ?
விசாலம் கண் சுருங்க ஒருநிமிஷம் சாமித் துரையை உற்றுப்பார்த்தாள். விஷயம் ஒரு நொடியில் விளங்கி விட்டது அவளுக்கு. 
அதுதானே.....இதான் கதையா
இத எப்படி சொல்லும் இந்தப்புள்ளயுந்தான். ம்ம்...
பொண்ணா? வேலையா? நியாயமா? தீர்ப்பா?
 விசாலம் பதிலேதும் சொல்லாமல் எழுந்து நடக்க ஆரம்பித்தாள். 
சாமித்துரை ஒரு சின்ன சிரிப்போடு வண்டியை எடுத்துக்கொண்டு அவளுக்கு எதிர்திசையில் கிளம்பிப் போனான்.


மறுநாள் காலை வேலைக்கு போன முதல்  வீட்டில் ஒரே களேபரம். விசாலம் ஹாலில் வந்து நின்றதும் வீடு கப்சிப் ன்னு கொஞ்சம் சுவிட்ச் ஆ ஃ ப் பண்ணது போல அமைதி. இவங்களும் பெருந்தனக்காரவுங்க தான். அந்த வீட்டில்  ரெண்டும் பொண்ணுங்க. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகியிருந்தது. இன்னொரு பொண்ணுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பொண்ணு மாங்கொல்லை வீட்டு பையனோட சிநேகம். ஒண்ணா காலேஜ் ல படிச்சவங்க. பொண்ணுக்கு பையன் மேல கொஞ்சம் எண்ணம் உண்டு. தான் உண்டு, தன் வேலையுண்டு இருப்பவன், காசு பணம் இருந்தாலும் மைனர் மாதிரி திரிவதில்லை. கதை இலக்கிய பரிச்சயமுண்டு. கொஞ்சம் இருவருக்கும் ஒத்த இரசனைகள்  
இன்று வீட்டில் வெடித்திருப்பது அந்த பிரச்சனைதான் என்று படு ஷார்ப்பான விசாலத்துக்கா தெரியாது. இருந்தாலும் எதுவும் கேட்டுக்காமல் வேலையை பார்த்துவிட்டு உட்கார்ந்தாள் வெற்றிலை போட.

ஆச்சு. வெற்றிலை வைபவம் முடிஞ்சு கிளம்பும் போது . பெண்ணின் அம்மா விசாலத்தை கொஞ்சம் இருக்கும்படி கேட்டுகொண்டு உள்ளே போனாள். மறுபடி உட்கார்ந்த விசாலம் ஏதும் சொல்லாமல் வ்ருட்டேன்று எழுந்து கிளம்பி போய்விட்டாள். 
மதியம், மாலை வரை வேலை இருந்தது அவளுக்கு. மாலை திரும்ப வீட்டுக்கு வரும்போது காலையில் முதலில் வேலை பார்த்த வீட்டுக்கு போய் நின்றாள். 
காவேரி வந்து, "என்ன விசாலம் இருக்க ச்சொன்னனே?
சொன்னீங்க சொன்னீங்க...பொழப்பு இருக்குல்ல...டைம் ஆயிடும் வாரக்குள்ள கேட்டுக்கலாம் ன்னு கிளம்பிட்டேன். சொல்லும்மா என்றாள். என்ன சொல்ல போகிறாள் என்பதை அறிந்தவளாக.
இல்லே...அது வந்து...நம்ம சின்ன  பொண்ணு என்னமோ சொன்னா...

என்ன சொல்லுது?

இல்லே..யாரோ..காலேஜ் ல கூட படிச்சவனாம். பக்கத்தூர்க்காரனாமே, விரும்புதாம்...இதை எப்படி அவுக கிட்ட சொல்றதுன்னு...

சரி..இன்னா பண்ணனும் அத்த சொல்லு 

ஐயோ...விசாலம் ஒண்ணும் பண்ண வேண்டாம். 
இது சரி வருமா? ன்னு தெரியல.

சரி...அதுக்கு?

நீ வேணா பையன் கிட்ட பேசிப்பாரேன்.
நீயும் அங்க வேலை செய்யற இல்லே ?

என்னான்னு பேசணும்?

இந்த மாதிரி அவனும் என் பொண்ணை விரும்பறானா ன்னு..

சரி..கேட்டு..இல்லேன்னுட்டா?

இல்லேனுட்டா...ஐயோ..என் பொண்ணு ஒரேடியா தூக்குல தொங்குவேன், அது இதுன்னு சொல்லி வச்சிருக்கா என்ன பண்றதுன்னு எனக்கும் ஒண்ணும் பிடிபடலியே விசாலம்..

சரி..காலைல வரேன். பாக்கலாம். 

வீட்டுக்கு போனதும் மேலுக்கு தண்ணி ஊற்றி உடம்பு கழுவிக்கொண்டு வெற்றிலை போட உட்கார்ந்தாள். அவள் பெண் பூங்கொடி இன்னும் வந்திருக்கவில்லை 
பூங்கொடி வருவதை கவனிக்காதது போல வெற்றிலை போடுவதில் தீவிர கவனம் போல மகளை ஆராய்ந்தாள். அவள் இது ஒன்றும் கவனிக்காதவளாக இயல்பாக வந்து அடுப்படிக்கு  போய் காப்பி கலந்து எடுத்து வந்து ஒரு செம்பில் நீருடன் வந்து அம்மாவிடம் நீர் சொம்பையும் காப்பியும்  கொடுத்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். விசாலம் நீர் சொம்பை எடுத்து வாய் கொப்பளித்துவிட்டு காப்பியை கையில் எடுத்துக்க்கொண்டே மகளிடம் 
"என்ன பூவு இன்னிக்கு ஏதும் விசேஷ சேதி உண்டா ? ன்னு கேட்க, "ஒண்ணும் இல்லமா "

சரி..ஒனக்கு கல்யாணம் பண்ணி வைக்க உத்தேசம் . உனக்கு ஆரு மேலயாச்சும்....

ஆரு மேலயாச்சும்.?

எண்ணம் இருக்கான்னு...

அதெல்லாம் ஏதும் இல்லம்மா...ஏழைக்கேத்த எள்ளுருண்டையா நீ ஏதும் பாத்து கட்டி வச்சா சரிதான். நீ என்ன தப்பாவா செய்வ? என்றாள்.

அடி என் ராசாத்தி...என்று மனசுக்குள் மெச்சிக்கொண்டு,  சரி பாக்கலாம். சாப்ட்டு படுக்கலாம் என்று முடித்து விட்டாள்..பூங்கொடிக்கு ஒரே ஆச்சரியம்...அம்மா ரொம்பத்தான் மாடர்னா ஆயிட்டு ! என்று  அதிசயித்த வண்ணம் அம்மாவின் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்.

மறுநாள் ஆற்றங்கரை அருகே  சாமித் துரையை சந்தித்த விசாலம் அவனிடம் பட்டென்று தம்பி நீ ஏதும் மனசில எண்ணம் வச்ருக்கியா ? சொல்லு. ஒன்ர அப்பங்காரங்கிட்ட நானே பேசுதேன்..என்று கேட்டாள்.

எதுக்கு கேக்கற ஆயா..காவேரி பொண்ணு ஏதும் சொல்லிச்சோ? கட்டிக்கிடலாம்தான். ஆனா உன்ர மவ தான் என்னை ரொம்ப சோதிக்கிறா... பேசக்கூட  மாட்டேங்கிறா.. இவளை த்தொடுப்பா வச்சிக்கிட்டு அவளை....

அவ்ளோதான் !
மறுநாள் செய்தி தாள்களில் செய்திப்படம் ஆனான்  சாமித்துரை.

விசாலம் வழக்கம் போல வேலையும் வெற்றிலையுமாக.

1 comment:

 1. வலிய இழுத்து பின்னி சுருட்டி கட்டிய
  கொண்டை கொஞ்சம் தூக்கலாய்
  இந்த வேலைகாரி விசாலத்திற்கு.
  அவளின் தலைக்கு இயல்பாய் இல்லை
  அந்த ஹேர்ஸ்டைல்....

  ReplyDelete