Saturday 4 October 2014

மாரல் சப்போர்ட்


                                         மாரல் சப்போர்ட் 

காலிங் பெல்லை மெல்லத் தொட்டாள் மகேஸ்வரி.
காலிங் பெல் அடிக்கப்பட்டதும் உள்ளே சிணுங்கின மணியோசை கூட "த்தட்" என்ற சப்தமும்..
"ஐயோ..இதோ வரேங்க..ஏங்கஇப்டி " என்ற  பானுவின் குரலும் என்னதான் தேக்கு கதவு அழுத்த சாத்தப்பட்டிருந்தாலும் வெளியே கேட்கத்தான் செய்தது.

கூட வேலை பார்க்கும் சக அதிகாரியை பார்க்க வந்திருந்தார்கள் மகேஸ்வரியும் ஜனனியும். மகேஸ்வரிக்கு அவர் க்ளாஸ்மேட் டும் கூட.

பானு வந்து கதவைத்திறந்து,  "வா மகேசு ", என்றாள்..ஜனனியையும் வாங்க என்றாள். பானுவின் முகத்திலிருந்து ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் மகேஸ்வரிக்கு உள்ளே நுழைந்து பானுவின் கணவரைப் மிகத்தயக்கமாக இருந்தது. ஹாலிலேயே நின்று கொண்டிருந்தார்கள். 
வாங்க உள்ளே, வாங்க மேம்.

தயங்கித்தயங்கி உள்ளே நுழைந்ததும்...மகேஸ், எவ்வளவோ கட்டுப்படுத்தி வைத்திருந்தும் கண்கள் அவள் கட்டுப்பாட்டை மீறி ஒரு கணம் அவரின் கால்களில் படிந்து மீண்டது.
இடது கால் முழங்காலுக்கு கீழே ஒன்றுமில்லாமல் .

வாம்மா, வாங்க என்று இருவரையும் வரவேற்றுவிட்டு, விக்டர் தலையை குனிந்து கொண்டார்.

"எப்படி இருக்கீங்க?" - மகேஸ். -கேள்வியின் அபத்தம் தெரிந்தும்,  கேட்காமல் இருக்க முடியலை.

"ம்ம்.. இருக்கேன்.  ஊருக்கும் பூமிக்கும் பாரமா.."

"சேச்சே அப்டி சொல்லாதீங்க...போன மாசம் நடந்த ஆக்சிடென்ட் ல நம்ம 
ஃ ப்ரென்ட் 'நிறை' தெரியும் ல? என்றாள் மகேஸ்.

தெரியும் ம்மா..இன்னும் அவங்க ஹஸ்பென்ட் அப்போலோ ல தான்.
கழுத்துக்கு  கீழ இன்னும் உணர்வு திரும்பல யாம்.

அப்படியாச்சும் போய் சேர்ந்திருக்கலாம்" என்றார் விரக்தியாக.

இதை,  இந்த மனக்கஷ்டத்தை  ஒரு சில வார்த்தைகளில் சரியாக்க முடியாது என்றே தோன்றியது. 

மீண்டும் அவள் கண்கள் அவர் காலை பார்த்து மீள...பானு  தொடர்ந்தாள்.

எவ்வளவோ தயங்கி எவ்வளவோ டிஸ்கஸ் பண்ணி, கன்வின்ஸ் பண்ணி அப்புறம் வேற வழி இல்லாம தான் காலை எடுத்தாங்க மகேஸ். நாப்பது வருசமா சுகர். மூணு வாட்டி ஹார்ட் சர்ஜரி .  என்ன பண்றது. சொல்லு. 

ஆனாலும் அவருக்கு இன்னும், தனக்கு  கால் இல்லேங்கிறது மைன்ட் ல  செட் ஆகல. யாராவது கூப்பிட்டா, காலிங் பெல் சத்தம் கேட்டா, என்னைக்கூப்பிட வந்தா ன்னு சட்டுன்னு எழுந்து விழுந்திடுறார் . 
இப்பல்லாம் அவருக்கு  அடிக்கடி பயங்கரமா கோவம் வருது மகேஸ்.

மகேஸ்வரியால் ஒரு கணம்,  நினைவை பழைய காலத்துக்கு ஓட்டி பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அவள் அந்த யூனிட்டில் சேர்ந்த புதிது. அவருக்கு கீழே வேலை. அவருக்கு கிண்டல் பண்ணாம பேசவே வராது. அவரோட கிண்டல் பழகி,  கொஞ்சம் சகஜ பாவம் வந்தப்புறம் இவள் அவரை பயங்கரமா ஓட்டுவாள்.

இந்தாங்க...எல்லார்கிட்டயும் போயி நானு மகேசு கிளாஸ்மெட் ன்னு தம்பட்டம் அடிக்காதீங்க..நீங்களும், உங்க சொட்டைத்தலையும்!
 நரைச்ச தலையும், தாடியுமா இருந்துகிட்டு ....என்னோட கிளாஸ்மெட் ன்னு இனிமே சொன்னீங்க  அப்புறம் தெரியும் சேதி என்று!
என்ன கிண்டல் பண்ணாலும் அவருக்கு கோபமே வராது. 

வீட்ல பானு கொஞ்சம் அப்செட் ம்மா..என்பார். அவளுக்கு கோவம் வந்தாலுமே இவருக்கு கோவமேவராது. அப்படிஇருந்தவர்...இன்று... இப்படி.. :(

பிள்ளைங்க எப்டி இருக்காங்க. ரிலேடிவ்ஸ் லாம் ? என்றாள் .

பானுவிடமிருந்து பதிலே இல்லை. 

அவங்க சைட் லேர்ந்தும் சரி, எங்க சைட்லேர்ந்தும் சரி யாருமே இப்பல்லாம் வரது இல்லை மகேஸ்! 

என்னது? ஏன் அப்டி ?

நீயே தேர்ந்தெடுத்துக்கிட்ட வாழ்க்கை. நீயே பார்த்துக்க என்று கூறி விட்டார்களாம்.

தானுண்டு. தன் வேலை உண்டு ன்னு இருப்பார்.  பிறருக்கு போய் வாலண்டியரா உதவி செய்ததும் இல்லை. 
உபத்திரவமும் செய்தது இல்லை. 

சரி..கிளம்பலாம் ன்னு சொல்லிகிட்டே பேச்சு தொடர்ந்தது. ஒருவழியா கிளம்பி வாசலுக்கு வந்தப்புறம் பானு சொன்னாள்

அவரோட தம்பி இங்க இருக்காரே அவரு ஒரு சமயம் இவரு கிட்ட வந்து தன்னோட வீடு எக்ஸ்டென்ட் பண்ண பணம் கேட்டார்.

ரெண்டு பேரும் இங்கே ஒரே நிறுவனத்தில் வேலை பாக்கிறவங்க தான். ஆனாலும் நாங்க என்னமோ சாலரி வாங்கி செலவே பண்ணாத மாதிரியும் 
அவருக்கு நாங்க தந்தா என்ன குறைஞ்சா போயிடுவோம்ங்கிற மாதிரியும் எண்ணம்.
இவருக்கு ஒண்ணும் சொல்ல முடியலை.
என்னை பார்த்தார். நான் எதுவும் சொல்லலை.
உள்ளே போயிட்டேன்.
இவரும் தம்பி கிட்ட "இப்ப முடியாது ஜான்.
ஆஸ்பிட்டல் லேர்ந்து வந்து ஒரு மாசம் தான் ஆகுது.
பொண்னை  இந்த வருஷம் காலேஜ் சேர்க்கணும் ,
செலவு இழுக்குது. இதில எங்கேர்ந்து உனக்கு " என்றதும்...

ஜான் கடுப்பாக, "குடுக்க மனசில்லை ன்னு சொல்லு. ஆஸ்பிடலுக்கு நிறுவனம் தானே செலவழிக்குது..அப்புறம் என்ன..?" என்றான்.

இப்ப பணம் ஏதும் குடுக்காட்டி வீடு பூந்து எல்லாத்தையும் ஒடைப்பேன் என்றான்.
செய்வான், செய்திருக்கிறான்.
இவர் சளைக்காமல் போலீஸ் க்கு கம்ப்ளெயின்ட் பண்ணுவேன் என்றார். போய்விட்டான்.

ஒரு மாரல் சப்போர்ட்டுக்காவது வரலாம், அதுவும் இல்லை.
இந்த காலத்தில் மாரல் சப்போர்ட்டை  கூட எதையாவது செய்து தான்
பெற வேண்டியிருப்பது காலக் கொடுமை.

கதை இங்கே முற்றுப்பெறவில்லைதான் . ஆனாலும் அதை தொடர்ந்து சொல்லி ஏதும் ஆகப்போவதும் இல்லை. ஒரு பேஷண்டின் மனநிலையும்,  அவரைக் கவனித்துக்கொள்பவரின் மன நிலையும்,   அவர்கள் தினம் தினம் சந்திக்கிற /அனுபவிக்கிற வேதனைகளும் ஒரு கதையில் முடிந்துவிடக் கூடியதா என்ன ?