Wednesday 5 July 2017

கயிலாய மற்றும் முக்திநாத் பரவச தரிசனம்

           

எங்கிருந்து தொடங்குவது.......?
நம்மை படைத்த இறைவனும் ஒரு கணம் இப்படி சிந்தித்திருக்கலாம்!
இது எப்போது விதையானது ?
வளர்வதே தெரியாமல் எப்படி விருட்சமானது ?
விருட்ச நிழலில் விருப்ப இளைப்பாறல்......

பதினைந்து ஆண்டுகளுக்கு முன், நான் ஈஷாவில் சேர்ந்த போது அங்கே போட்டுக்காட்டப்பட்ட  கைலாஷ் மானசரோவர்  யாத்திரையின் வீடியோ பதிவைப் பார்த்து பிரமித்து வாயடைத்துப் போயிருக்கிறேன்.
அவ்வளவு பணம் ஏது நம்மிடம்?
மேலும் அவ்ளோ ரிஸ்க்கான பயணம்தான் என்னத்துக்கு? என்பதாக.
அப்போதே வித்து விழுந்திருக்க கூடும்.  
ஆனாலும் விருப்பம் தீவிரமாய் இல்லாததால் விதை உறங்கிக்கொண்டு இருந்திருக்கலாம்.

கூட வேலை பார்க்கும் தோழி கைலாஷ் வீடியோ பார்க்க என்னை அழைக்க, நான் கொஞ்சம் யோசித்து யார்லாம் வருவாங்க என்றேன்..
கைலாஷ் போறவங்கல்லாம் வருவாங்க என்றாள் கேஷுவலாக.
போய் பார்த்துட்டு வந்தப்ப கூட போவது பற்றி எண்ணம் இன்னும் தீவிரமடையவில்லை.
இன்னும் இரண்டு நாளில் முன்பணம் கட்டி பதிவு பண்ணவேண்டும்.
வீட்டில் அப்பாவிடம் பர்மிஷன் வாங்குவது என்பது சீனாவிடம் இந்தியா சமாதானம் பேசுவது போல. மிக சிக்கலான ஒன்று !
எதோ ஒரு தீவிர கணத்தில் எது என்னை உந்தியதோ....பணம் கட்ட முடிவு செய்து போய் கட்டியாச்சு...( அன்று அம்மா தெவசம்)...சரி..அம்மா பார்த்துப்பாங்க  ன்னு விட்டுட்டேன்....

போக வேண்டிய நாளும் நெருங்கியது.....
இதற்கு நடுவில்தான் எத்தனை எத்தனை சோதனைகள்.. தம்பிக்கு ஒரு ரோட் ஆக்ஸிடென்ட்ல தலையில் அடி, தையல்.
மீண்டும் ஒரு பத்து நாளைக்குள் அவனுக்கு மறுபடி ஒரு ஆக்சிடென்ட்.
கால் ல அடி.
அடுத்து அன்பான அத்தையின் இழப்பு..
ஆ ஃ பீஸ் குவார்ட்டர்ஸ் சரண்டர் பண்ண வேண்டிய நேரம்
தம்பிக்கு வீடு மாற்றி தர வேண்டிய நேரம்.
ஐயோ....போக முடியாம போயிடுமோ.........என்று மனது கிடந்து தவித்தது..
இத்தனை கச்ச்சடாக்களையும் தூசாக்கி,  

சென்னை டு டெல்லி, டெல்லி டு லக்னோ என்று ஒரே தூக்காய் என்னை கொண்டு போய் லக்னோவிலிருந்து நேபாள்கஞ் கொண்டு போய் சேர்த்தது இறையருள். மீண்டும் ஒரு தேக்கம்...விசா கிடைக்க தாமதம்.
இந்த இரண்டு நாட்களில் நேபாள்கஞ்சில் பர்தியா நேஷனல் பார்க், மா பாகீஸ்வரி தேவி மந்திர் என்று சுற்றினோம்.

அடுத்து 19 இருக்கைகள் கொண்ட சின்னஞ்சிறு விமானத்தில் சிமிகோட் என்கிற இடத்துக்கு புறப்பட்டு, இங்கும் எதிர்பாராமல் இரண்டு நாள் தேக்கம். விசா தாமதம் ஒரு பக்கம், மோசமான வானிலை ஒரு பக்கம்.
எங்கள் குழுவிலிருந்தது அம்பது பேர். ஆனால் எங்கள் ட்ராவல்ஸ்க்கு  இரண்டு ஹெலிகாப்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட, 4, 5 பேராக ஹில்சா என்ற இடத்துக்கு 25 நிமிட பயணம். யப்பா. த்ரில்லிங்....இறைவனின் படைப்பை இரசிக்க முடியாமல் ஹெலி அனுபவம் திக் திக் ன்னு இருந்தது.  முட்ட வரும் காளை போல குனிந்து நிமிர்ந்து மலைகளுக்கு இடையே பறந்த கணங்கள் மறக்க முடியாத அமோக அற்புத தருணங்கள்.

ஹில்சாவிலிருந்து பஸ் பயணம், தக்கல்கோட் நோக்கி. கடுமையான எல்லை சோதனை. யாரும் எங்கும் படம் பிடிக்க கூடாது என்கிற கடுமையான அறிவுறுத்தல். மேலும் ஃபோனில் தலாய் லாமா படம் வச்சிருந்தா டெலிட் பண்ணிடுங்க கேள்வியே கேட்காமல், விசாரணையே இல்லாம hang out தான் என்றும் எச்சரிக்கப்பட்டோம். ஒருவழியாய் தக்கல்கோட் அடைந்து தங்கல். இங்கு எங்களுக்கு ஆக்சிஜன் லெவல் செக் பண்ணுகிறார்கள்.
80க்கு மேல் இருக்கவேண்டும். எங்கள் அனைவருக்கும் அப்படியே இருந்தது.

மறுநாள் அதியற்புத பயணம் அதியற்புத மானசரோவர் நோக்கி. Lake NO.1 2, 3, 4 என்று பிரித்திருந்த ஏரிகளின் அபார அழகு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அதன் தெள்ளத்தெளிவோ நம்ப இயலாத ஆச்சரியம். பஸ்ஸிலேயே மானசரோவரை வலம் வந்தோம். கிட்டத்தட்ட 35-40 நிமிடங்கள். பிறகு அந்த அழகுமிகு புனித ஏரியில் நடுநடுங்கிகொண்டே ஸ்நானம்...மட்ட மத்யானத்திலும் அவ்வளவு வெயிலிலும் குளிர் உலுக்கி எடுத்தது. பூஜை, தீர்த்தம் சேகரித்தல், ஏரியிலிருக்கும் கற்கள் சிவனாக கருதப்படுகிறது. சக்தியோடு கொஞ்சம் சிவம் (எடுத்தோம்) அடைந்தோம்.



அங்கேயே கொடுக்கப்பட்டிருக்கும் சின்னஞ்சிறு ரூம்களில் ஏரியை பார்த்தவாறே தங்கினோம். இரவில் தூங்காமல் விழித்திருந்தால் பற்பல அதிசயங்களை காணலாம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அற்புத அனுபவங்கள். அங்கிருக்கும் புறா போன்ற பறவை (புறா இல்லை கொஞ்சம் காக்கை போலவும் அலகு நீண்டு சற்றே சாம்பல் கலரிலும், உடல் வெண்மையாகவும் இருக்கின்றன). உமா உமா உமா என்று அவை கத்துவது காக்கை கரைவது போலவே இருந்தாலும் உன்னிப்பாக கவனித்தால் அந்த உமா என்கிற தொனி புலப்படுகிறது) தேவர்கள், சித்தர்கள் வந்து நீராட விஷ்ணு அமைத்த ஏரியாம் இந்த அழகுமிகு மானசரோவர். சக்தி ரூபம்.

மீண்டும் ஆக்சிஜன் லெவல் செக் பண்ணுகிறார்கள். இப்போது (நேற்று தக்கல் கோட்டில் எடுத்திருந்ததை விட)கொஞ்சம் குறைந்திருந்தது. உயரம் காரணமாக.

மறுநாள் காலை கயிலைமலையானை நோக்கி பயணம். டார்ச்சன் வரை பஸ்ஸில் கொண்டு விடுகிறார்கள். அங்கிருந்து துவங்குகிறது பரிக்கிரமா எனும் இமயச்சுற்று. குதிரை வேண்டுபவர்கள் முன்பே புக் பண்ணியிருக்க வேண்டும். மூன்று நாள் பரிக்கிரமாவாக இருந்தாலும் ஒருநாள் பரிக்கிரமா வாக இருந்தாலும் ஒரே தொகைதான். எங்கள் குழுவில் நாங்கள் பெரும்பாலோர் குதிரை வேண்டாம், நடக்கிறோம் என்று கூறிவிட்டோம்.

முதல்நாள் ஆறுமணி நேரம். காலை 9.45க்கு தொடங்கி மதியம் 3.45க்கு முதல்நாள் பரிக்கிரமா முடிகிறது....விதவிதமான வினோத அழகழகாய் பறவைகள், எருமைகள், நதியோட்டங்கள், பிரம்மாண்ட பாறைகள் என்று அந்த தன்னந்தனிமை வழிக்கு இன்னும் அமானுஷ்யம் சேர்க்கின்றன. ஒருவரியில் சொல்லிவிட முடிகிற அளவு பயணம் அவ்வளவு சுலபமாக இல்லைதான் எனினும் நல்லபடி எங்களை கொண்டு சேர்த்தார் கயிலைமலையார்.. வழியெல்லாம் முதலில், தெற்கு முகம், தென்மேற்கு  முகம், கிழக்கு முகம், வடக்குமுகம் என பற்பல வடிவம் காட்டி எங்களை பரவசமடைய செய்த பரமனுக்கு தனது மேனியை பொன்னார் மேனியனாக காட்ட மனமில்லை போல.
ஒரே cloudy... செம்பொன்னாராக மட்டுமே  காட்டினார்.


தொரல்புக் என்கிற இடத்தை அடைந்து தங்கல். அப்போதே ஜவ்வரிசி ஜவ்வரிசியாய் பனி கொட்டி வினாடிகளில் அந்த இடத்தை வெள்ளைவெளேர் என்று மூடியது...

இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் பரிக்கிரமாவுக்கு நாங்கள் அனுமதிக்கப் படவில்லை. கடும் நிலச்சரிவு மற்றும் பனிப்பொழிவு காரணமாக.

கொஞ்சம் வாட்டத்துடனே வந்த வழியே திரும்பினோம். சிலருக்கு முடியாமல் ஆம்புலன்ஸ்ஸில் திரும்பினார்கள். சிலர் குதிரையில். நாங்கள் வழக்கம்போல நடராஜனை நம்பி நடராஜா சர்வீஸ் ல நடந்தோம்.
டார்ச்சன் வந்து, மானசரோவர் வந்து தக்கல்கோட் அடைந்து எங்கள் பாஸ்போர்ட்டை கலெக்ட் பண்ணிக்கொண்டு தங்கல். மறுநாள் மீண்டும் ஹெலிகாப்டர் பயணம், மீண்டும் சிறு விமானபயணம். மீண்டும் நேபாள்கஞ்சில் தங்கல்.

சிலர் இங்கிருந்து சென்னை திரும்பிவிட்டனர்.
எங்களில் சிலரே முக்திநாத் பயணம்.
இந்த பயணம் குறித்து பல முக்கிய விளக்கங்களும், குறிப்புகளும் கொடுத்த எழுத்தாளரும் எங்களின் இனிய நண்பருமான வித்யா சுப்பிரமணியம் அவர்களை இங்கே கண்டிப்பாக குறிப்பிட்டே ஆகவேண்டும். முக்திநாத் போறதுக்கு முன்னாலே நிறைய பிரார்த்தனை வச்சுக்கோ இங்கேருந்தே. சிவன் எளிதாக காட்சி குடுத்துருவான்..
பெருமாள் சோதிச்சுத்தான் குடுப்பான் என்றபோது...அதை நான் பெரிதாக எண்ணவில்லை.

மாலையில் ஆரம்பிச்சுது சோதனை..
நேபாள்கஞ் வந்ததும் ட்ராவல்ஸ் காரங்க கிட்ட எங்க குழுவில் இருந்த சிலபேரோட ஆதங்கம் கோபமாய் வெடித்தது. (ஏன் விசா முன்பே ரெடி பண்ணலை, நாங்கதான் மூணு மாசம் முன்னாடியே புக் பண்ணியிருக்கோமே ரெண்டும் ரெண்டும் நாலு நாள் வேஸ்டா போச்சு. இப்ப காத்மாண்டுக்கு பஸ்சிலா...அதுவும் பத்துமணி நேரம்....இடுப்பு ஒடிய...ஏன் இப்டி எட்செட்ரா....எட்செட்ரா  ..முக்திநாத் ட்ரிப்பே வேணாம். கேன்சல் பண்ணுங்க என்பது வரை போக... எனக்கு ஐயோ ன்னு இருந்தது. யார் பக்கமும்  பேச முடியாமல் எங்கே முக்திநாத் போகமுடியாது போய்விடுமோ, பெருமாளை தரிசிக்க முடியாது போய்விடுமோ என்கிற ஆற்றாமையில் மனது கிடந்து தவியாய் தவித்தது.

மறுநாள் மதியம் வரை இதே நிலைமை நீடிக்க...மீண்டும் சிலர் சென்னை திரும்பிவிட...நாங்கள் பஸ் அரேன்ஜ் பண்ணி போக்ரா கிளம்பினோம். விடிய விடிய மலைப்பாதை பயணம்.  கிட்டத்தட்ட 12 மணி நேர பயணம். அதிகாலை 2,45 க்கு வந்து எங்களுக்கு அரேன்ஜ் பண்ணியிருந்த காட்டேஜ் பார்த்ததும் கொஞ்சம் சமாதானம் ஆச்சு. லவ்லி காட்டேஜஸ். தங்க முடியாமல் உடனே கிளம்ப வேண்டியிருந்தது. சின்ன விமானத்தில் ஜோம்சம் என்ற இடத்திற்கு போய் அங்கிருந்து மகிந்திரா, ஸ்கார்ப்பியோ போன்ற rough & tough வாகனங்களில் முக்திநாத் பயணம். பாதையோ வெகு கரடுமுரடாய் இருந்து எங்களை ஓயாமல் உலுக்கியெடுத்தது. சுமார் ஒன்னரை மணி நேர பயணம். அங்கிருந்து மலைப்பாதை ஏற குதிரை அல்லது மோட்டர் சைக்கிள். நாங்கள் நடந்தோம். 

ஒரு 20 நிமிடங்களில் முக்திநாத். ஹிந்துக்களுக்கும் புத்தரை வழிபடுபவர்களுக்குமான புனித ஸ்தலம். கீழேயிருந்து 3710 மீட்டர் உயரம். 106-வது திவ்யதேசம். சுயம்பு மூர்த்தி. (எட்டு சுயம்பு ஸ்தலங்களில் ஒன்று. மற்ற ஏழு, ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், நைமிசாரண்யம், தோத்தாத்திரி, புஷ்கரம் & பத்ரிநாத் ) மூலவர்: முக்திநாதர் (எ) முக்தி நாராயணன் , ஸ்ரீ தேவி பூதேவி  தாயார். இவர்களுடன் கூட சரஸ்வதி, ஜானகி, கருடன் மற்றும் லவ குசா சப்தரிஷிகளுடன் கண்கொள்ளா காட்சி
உற்சவர்: ஸ்ரீ மூர்த்தி. கண்டகி நதி, சக்ர தீரத்தம். விமானம்: கனகவிமானம்.


இராமானுஜர் இந்த மொத்த தொலைவையும் அன்றைய காலகட்டத்தில் நடந்தே வந்திருக்கிறார் என்கிற தகவல் மிக பிரமிப்பு.  
வரிசையாய் கொட்டும் 108 கோமுக திவ்ய தீர்த்தங்களில் தலையை நீட்டி ஒரே ஓட்டமாய் எங்களை நனைத்துக்கொண்டே ஓடி நீராடி ( குளிர் பந்தாடியது ), பாவக்குளம், புண்ணியக்குளம் இரண்டிலும் முழுகி கடந்து கண்கள் பனிக்க பெருமாளின் பரவச திவ்ய தரிசனம். பத்மாசனத்தில் அமர்ந்த கோலம். முன்பெல்லாம் ஸ்வாமியை தொட அனுமதி உண்டாம். இப்ப இல்லை.

அங்கே பகலுணவு (பேர்தான் பகலுணவு. மணி 4.30ஆகியிருந்தது!) முடித்து ஜீப்பில் ஜோம்சம் வந்து தங்கல். மறுநாள் மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக விமானம் ஏதும் புறப்படவில்லை. எனவே அதே rough & tough வாகனங்களில் மீண்டும் பொக்ரா. இதை அடைய சுமார் 9 மணி நேரம். ஒரு நிமிடம் கூட இடைவெளியின்றி எங்களை உலுக்கியெடுத்த மலைப்பயணம். 9 மணி நேரமும் எங்களுடன் கூடவே ஆவேசத்துடன் முட்டி மோதி ஆர்ப்பரித்து பயணித்த கண்டகி நதி. விமானத்தில் 20/25 நிமிடங்களில் வந்திருந்தால் இதையெல்லாம் மிஸ் பண்ணியிருப்போம்.
வந்து அந்த லவ்லி காட்டேஜில் சொகுசாய் தங்கல்.


மறுநாள் காலை கிளம்பி காத்மாண்டு. ஒரு நாட்டின் தலைநகர் என்கிற அளவில் இது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே. ஒரே புழுதியும் ஒழுங்கின்மை கொண்ட ட்ராஃ பிக்கும். நம்ம சிங்காரச்சென்னை எவ்வளவோ தேவலாம். ஆனாலும் இது கடவுள் தேசம்!
மதிய உணவுக்கு பிறகு சற்றே இளைப்பாறி, மாலை சுமார் நான்கு மணியளவில் ஒரு நாற்பது நிமிட நேர பஸ் பயணத்தில் ஒரு கோவில். என்ன கோவில்ன்னே தெரியாமல் உள்ளே வரிசையா போய் பார்த்தால்.....
ஆஹா..ஜம்ம்முன்னு ஹாயா பிரம்மாண்டமா படுத்திருக்கார் நம்ம ஜலநாராயணன். பார்க்கப்பார்க்கத் தெவிட்டவில்லை.



தரிசனம் முடிஞ்சு அப்படியே ஒரு பத்துநிமிட நடை தூரத்தில் குயேஸ்வரி என்கிற சக்தி பீடம். தேவியின் ப்ருஷ்ட பாகம் விழுந்த இடமாம்.
இங்கிருந்து ஒரு 15 நிமிட நடை தூரத்தில் பசுபதீஸ்வரர் கோவில். ஜெகஜ்ஜோதியாய். திருப்பதி போல ஜேஜே ன்னு இருந்தது கும்பல். நான்கு புறமும் தரிசிக்கும்படி முகம் காட்டுகிற அற்புத லிங்கம். காசியில் போல இங்கும் சந்தியா நேரத்தில் ஆரத்தி என்கிற வைபவம் ஜோராக களைகட்டியது. ஒர் பெண் நடமிட, அடுக்கு தீபாராதனைகளின் சுழற்றல், ஆட்டமும் பாட்டமுமாய் பரவச கணங்கள்.


எங்கள் பட்டியலில் இருந்த மனக்காம்னா தேவியை  தரிசிக்க முடியவில்லை. இங்கு உலகிலேயே உயரமும் நீளமுமான rope car முக்கியமாய்  பார்க்க வேண்டிய ஒன்று. we missed it.

மறுநாள் மதியம் டெல்லிக்கு விமானம். அங்கிருந்து சென்னைக்கு இரவு 8.45க்கு விமானம். நள்ளிரவில் சிங்காரச்சென்னை வந்தடைந்து அங்கிருந்து நெய்வேலி.

எந்த புண்ணிய நதியில் குளிப்பாட்டினாலும் பாகற்காயின் கசப்பு போகாதாம். அது போலத்தான் இருக்கிறோமா அல்லது கொஞ்சமேனும் பக்குவம் அடைஞ்சிருக்கோமா என்பது போகப்போகத்தான் தெரியும்.       ( நண்பர்கள்சோதிச்சுப்பார்க்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்ள படுகிறீர்கள் !!! )

பற்பல முதன்முறைகளை கொண்ட ஜூன் 15ம் தேதி இரவு தொடங்கிய எங்களின் கயிலாய மற்றும் முக்திநாத் யாத்திரை ஜூலை 1 ம் தேதி இனிதே நிறைவடைந்தது.

உடலளவில் நெய்வேலி வந்துவிட்டாலும், இன்னும் உறங்கி எழும் போதெல்லாம் சிலசமயம் விமான நிலையத்தில் எங்கள் பெட்டி வரும் கன்வேயர் அருகே, சிலசமயம் மலை ஏற்றம், சில நேரங்களில் பஸ் பிடிக்க ஓட்டம், சிலநேரம் பனி உணர்வது போல சில்லிப்பு என்று ஆங்காங்கே இருந்துகொண்டே இருக்கிறாற்போல .....மாயை...
இன்னும் முழுதாக மனம் என் வசமாகவில்லை....

இறையருள் துணையுடன் சரியான முன்னேற்பாட்டுடன் போனால் கயிலை மலையென்ன நிலவுக்கு கூட நிம்மதியாய் போய் வந்திடலாம்.

இத்தகைய யாத்திரை போக விரும்பும் அன்பர்களுக்கு 
அவரவர் விரும்பிய வண்ணமே விரைவில் அமைய
இனிய பிரார்த்தனைகளுடன் இதனை நிறைவு செய்கிறேன்...  __/\__













No comments:

Post a Comment